நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சுப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிஃபர் . இந்த திரைப்படத்தை தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிட்டிருந்தனர். படம் வெளியாகி கிட்டத்தட்ட  200 கோடி ரூபாய் வசூல் வேட்டை செய்து சாதனை படைத்தது. ஹேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட  லூசிஃபர் படத்தின் ரிமேக்கை தெலுங்கில் தற்போது எடுத்து வருகின்றனர் . முன்னதாக இயக்குநர் சுஜித், வி.வி.விநாயக் உள்ளிட்டோர் லூசிஃபர் ரிமேக்கை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தை தற்போது இயக்கி வருகிறார்.நடிகர் ராம்சரண், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படம் சிரஞ்சீவியில் 153 வது படமாக உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது.





இந்நிலையில் இயக்குநர் மோகன்ராஜா , பாலிவுட் நடிகர் சல்மான்கானை லூசிஃபர் படத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லூசிஃபர் மலையளத்தில் பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நட்சத்திர நடிகருள் ஒருவரான சல்மானை மோகன்ராஜா இயக்குவதாக வந்திருக்கும் முதற்கட்ட தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன்ராஜா எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் லூசிஃபர் படத்தை இயக்குவதற்காக  அந்த படத்தை மோகன்ராஜா கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. லூசிஃபர் படத்தின் ரிமேக்கை எடுத்து முடித்த கையோடு , மோகன் ரஜா தனி ஒருவர் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றன. 


 





கடந்த 2001-ம் ஆண்டு 'ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. அந்த படத்திற்கு பிறகு  அவரது தம்பி ரவியை வைத்து ஜெயம் படத்தை இயக்கினார். அந்த படம்  நல்ல வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மோகன்ராஜா  எந்தவொரு தெலுங்குப் படத்தையும்  இயக்கவில்லை. சுமார் 19 ஆண்டுகள் கழித்து மோகன்ராஜா  'லூசிஃபர்'  படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.