சலார் படத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.


சலார்:


கேஜிஎஃப் படத்தின் வரலாறு காணாத ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படம் சலார். இப்படத்தின் மூலம் முதன்முதலாக தெலுங்கில் அதுவும் பாகுபலி படம் மூலம் பெரும் புகழ்பெற்று பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்த நடிகர் பிரபாஸூடன் சலார் படத்தில் பிரசாந்த் நீல் இணைந்துள்ளார்.


கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்த ரவி பர்சூரே இப்படத்துக்கும் இசையமைக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன், நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


அப்டேட் தந்த ஸ்ருதிஹாசன்:


இந்நிலையில் சலார் படத்தில் தன் தொடர்பான காட்சிகளின் ஷூட்டிங்கின் முடிந்துவிட்டதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி, சலார் படத்தில் என் பகுதி நிறைவடைந்தது. என்னை உங்கள் ஆத்யாவாக மாற்றியதற்கு நன்றி ப்ரசாந்த் நீல். சிறந்த டார்லிங்காக இருந்ததற்கும் அருமை என்பதைத் தாண்டியும் இருந்த பிரபாஸூக்கு நன்றி. பாசிட்டிவிட்டி நிரம்பிய இந்தக் குழுவை படப்பிடிப்பின் முடிவில் உண்மையிலேயே குடும்பம் போல் உணர்ந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.




இந்நிலையில் ஸ்ருதியின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. முன்னதாக தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களிலுமே  ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.


இந்நிலையில், ஸ்ருதி ஹாசனை சலார் படத்தில் எதிர்பார்த்து அவரது தெலுங்கு ரசிகர்கள் காத்துள்ளனர். தெலுங்கில் நேரடியாக உருவாகி வரும் சலார் படம், தமிழ், கன்னடா, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


கேஜிஎஃப், காந்தாரா படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஹோம்பாலே நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.


கே.ஜி.எஃப் இயக்குனர்:


2021ஆம் ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. அதன் பின்னர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்திலும், பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படப்பிடிப்பிலும் பிசியாகிவிட, கடந்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.


இந்நிலையில், இப்படத்தின் 20 நிமிட ஆக்‌ஷன் காட்சிக்காக நடுக்கடலில் 10 கோடி ரூபாய் மதிப்பில் செட் அமைக்கப்பட்டு முன்னதாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.


கேஜிஎஃப் படத்தின் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக சலார் இருக்கலாம் என ஏற்கெனெவே பேசப்பட்டும் வருகிறது. இந்நிலையில், இந்த் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதி சலார் படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.