பரபரப்பான கருத்துகளுக்கு பெயர்போனவர் நடிகர் சாய்பல்லவி என்றால் அவரது படபட பேச்சுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல அவருடைய தங்கை பூஜா கண்ணன். 2021ல் வெளியான சித்திரைச் செவ்வானம் படத்தில் நடித்த அவர் அதன் பிறகு பல்வேறு பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார். சாய்பல்லவியின் தங்கை என்றாலும் அவருடைய இரட்டையர் என்றே பலரும் நினைக்கின்றனர் என்கிறார் அவர்.
பொள்ளாச்சி பாலியல் வன்குற்ற சம்பவப் பின்னணியில் உருவான அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், “எனக்கு துணை இயக்குநராக நடித்த அனுபவம் கிடையாது.ஆனால் இண்டஸ்ட்ரியில் நிறையபேர் அப்படித் தவறாகப் புரிஞ்சிட்டு இருக்காங்க.நான் என் அக்காவுடன் அடிக்கடி ஷுட்டிங் ஸ்பாட் போவேன். அப்படித்தான் என்னை நடிப்புக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவரது நடிப்பு மூலமாக உணர்ந்தேன். சித்திரைச் செவ்வானம் படத்தில் நடிக்கும்போது படத்தின் ஒரு காட்சியில் ஒரு இயக்குநர் ஸ்க்ரிப்டை விளக்கவும் மெண்டலி ரொம்பவே டிஸ்டர்பாகிட்டேன். அந்த ஷாட் எடுத்த பிறகு ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பாதிக்கப்பட்டவர்களுடைய வலி எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னால் நான் உணர்ந்ததை வெளியே பகிர முடியவில்லை. படத்தின் காட்சியைப் பார்த்துவிட்டு அக்கா ஒரு ஹக் கொடுத்தா.அவங்களையுமே அந்தக் காட்சி பாதிச்சிருந்தது” என்கிறார்.
பூஜாவின் ரசிகர்கள் அவரும் சாய்பல்லவி போல மருத்துவர் ஆவாரா எனக் கேட்ட கேள்விக்கு சிரித்தபடியே பதில் சொன்ன அவர்,”எனக்குச் சரிப்படாத எதையும் நான் செய்ய மாட்டேன்” என்கிறார் தன் அக்கா போலவே சிரித்தபடி. அக்கா 8 அடி பாய்ந்தால் தங்கை 16 அடி பாய்கிறார்.