தமிழ் திரையுலகல் பல புதிய திறமைகளை அடிக்கடி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. சமூக வலைதளமான யூ டியூப், இன்ஸ்டாகிராம் வளர்சிக்கு பிறகு பலரும் தங்களது திறமையை இந்த உலகிற்கு காட்டி வருகின்றனர். அதன்மூலமாக திரையுலகிலும் அறிமுகமாகி அசத்தி வருகின்றனர்.
சாய் அபியங்கர்:
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பேசுபொருளாக உருவெடுத்திருப்பவர் சாய் அபயங்கர். தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு – ஹரிணி தம்பதியின் மகன் இவர் ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் செய்த அவருடைய ஆல்பம் பாடலான கட்சி சேர என்ற பாடல் சமூக வலைதளங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.
பின்னர், கடந்த ஜூன் மாதம் இவர் வெளியிட்ட ஆச கூட ஆல்பம் பாடல் சமூக வலைதளங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே நாளில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் எல்.சி.யூ. வரிசையில் இடம்பெறும் பென்ஸ் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தை ரெமோ, சுல்தான் படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.
அடுத்த அனிருத்:
எல்.சி.யூ. வரிசையில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள சாய் அபியங்கர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூர்யா நடிக்கும் அந்த படத்தில் இசையமைப்பாளராக அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
20 வயதே ஆன சாய் அபியங்கர் பாடகராக, இசையமைப்பாளராக அசத்தி வரும் சூழலில் அவர் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய இரண்டு படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகம் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்கி வருகிறது.
பிரபலங்களின் படங்கள்:
ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் குறைந்த படங்களுக்கே இசையமைத்து வரும் சூழலில், தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இசையமைப்பாளராக அனிருத் உள்ளார். 3 படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
தற்போது கோலிவுட்டின் புதிய ஸ்டாராக உருவெடுத்து வருபவர் சாய் அபியங்கர். இனி வரும் காலங்களில் முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் சாய் அபியங்கரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.