சின்னக்கவுண்டர், மன்னன் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸான நிலையில் சின்னக்கவுண்டர் படத்தின் மாஸ் வெற்றியை ரஜினிகாந்த மனமார பாராட்டியதை நினைவுகூர்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
1990களில் வெளியான எஜமான், சின்னக் கவுண்டர் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இவர் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
இவருடைய ஃப்ளாஷ்பேக் பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் சின்னக்கவுண்டர் வெற்றி பற்றியும் அதற்கு ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டியது குறித்தும் விளக்கியுள்ளார் ஆர்.வி.உதயகுமார்.
அவருடைய பேட்டியிலிருந்து:
அப்போது மன்னன், சின்னக்கவுண்டர் ஒரே நேரத்தில் ரிலீஸாகியிருந்தது. இரண்டு படங்களும் தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. சின்னக்கவுண்டருக்கு பெண்கள் ஆடியன்ஸ் அதிகமாக இருப்பதாக எனக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ரஜினிகாந்த் பேசினார். என்னை போனில் அழைத்து அவரிடம் சார் வணக்கம். நல்லா இருக்கீங்களா? மன்னன் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. படம் நல்லா ஓடுது என்றேன். மன்னன் நம்பர் 1, சின்னக்கவுண்டர் நம்பர் 2 என்றேன்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரஜினி சார், இல்ல ஆர்.வி. சின்னக்கவுண்டர் நம்பர் 1, மன்னன் நம்பர் 2 என்றார். சார் உங்கள் வாயால் இதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றேன். சரி நாளைக்கு என்னைப் பார்க்க வாங்க நாம ஒரு படம் பண்ணுவோம் என்றார். உடனே ஒரு கதையை யோசித்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன். படத்திற்குப் பெயர் ஜில்லா கலெக்டர் என்று சொல்லி கதையைச் சொன்னேன். அவருக்கு கதை ரொம்ப பிடித்துவிட்டது.
உடனே அவர் ஏவிஎம் சரவணன் அண்ணனை வரச் சொன்னார். அவர் கதையைக் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். எனக்கும், ரஜினி சாருக்கும் ஆளுக்கு ஒரு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். அப்புறம் இளையராஜா தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கா வேண்டும் என்றேன். சரவணன் சார் அவர் ஏவிஎம்முக்கு பண்ண மாட்டார் என்றார். நான் பேசுகிறேன் என்றேன். இளையராஜா சாரை சந்தித்துப் பேசினேன். ஏன் ஏவிஎம் சரவணன் வரமாட்டாரா என்றார். அவரையும் கூட்டிச் சென்றேன். அப்புறம் அவர்கள் இருவரும் மீண்டும் நட்பாகிவிட்டனர். என்னை கழற்றிவிட்டுவிட்டனர்.
இளையராஜா சார் எதையும் மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். அவர் ஒரு மனிதருள் மாணிக்கம். சினிமாத்துறையில் வெறுப்பெல்லாம் இருக்காது. சின்னச்சின்ன ஈகோ தான் இருக்கும். அதுவும் இப்படி ஒரு தருணத்தில் உடைந்து சமாதானம் வந்துவிடும்.
இவ்வாறாக மன்னன், சின்னக்கவுண்டர் வெற்றி பற்றியும், தனக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு பற்றியும் பேசியுள்ளார் ஆர்.வி.உதயகுமார்.