ஆஸ்கர் விருதுகள்:
95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக நடப்பாண்டில், 301 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் பரிந்துரைப்பட்டியலில் 276 படங்கள் மட்டுமே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டிற்கான பரிந்துரைப்பட்டியலில், 10 இந்திய திரைப்படங்கள் சிறந்த படத்திற்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படங்கள்:
இந்திய அரசு தரப்பில் இருந்து சிறந்த படத்திற்காக குஜராத்தி படமான தி செல்லோ ஷோ அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு, தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா, கங்குபாய் கத்தியவாடி, 'ஆர்ஆர்ஆர்' மற்றும் ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி, மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
முதல் முறை:
மேலே குறிப்பிடப்பட்ட திரைப்படங்களில், தி காஷ்மீர் பைல்ஸ், காந்தாரா மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள், விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் பிரமாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சிறந்த பாடலுக்கான விருது பிரிவிலும் RRR படத்தின் நாட்டு, நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய பாடல் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது. இதேபோன்று, காந்தார திரைப்படமும், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகை மற்றும் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் படங்களின் பெயர்கள், வரும் 24ம் தேதி வெளியாகுன் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது படம் ஆஸ்கர் விருதுகளுக்கான முதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்தியை பகிர்ந்துள்ளார். இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்றும் அவர் கூறினார். பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் 'சிறந்த நடிகர்' விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று இயக்குனர் பார்த்திபனும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', 'பிளாக் பாந்தர்: வகாண்டா பாரெவர்' மற்றும் அதிக வசூல் செய்த 'ஆப்டர்சன்' ஆகிய ஹாலிவுட் படங்களும், சிறந்த திரைப்படத்திற்கான விருது பட்டியலுக்கு போட்டியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.