கடந்தாண்டு இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகியிருந்தது.


இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் “நாட்டு நாட்டு” பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில்  நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.


இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஜப்பானில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இயக்குநர் ராஜமெளலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 164ல் 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இத்தனை பேருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.






இந்தியாவுக்கு பெருமை:


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  அண்மையில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற  நாட்டு நாட்டு பாடலும், ஆவணப்படம் பிரிவில்  The Elephant Whisperers படமும், Documentary Feature Film பிரிவில் All That Breathes படமும் போட்டியிட்டது.


இதில் All That Breathes படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சிறந்த பாடலுக்கான பிரிவில்  நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.


ஆஸ்கர் விழாவில் இப்பாடலுக்கு விழா மேடையில் நடன கலைஞர்கள் நடனமாடினர்.  பாடல் முடிந்தவுடன் விழாவிற்கு வந்த அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர். 


இவையெல்லாம் ஒருபுறம் இருக்க ஆஸ்கர் விருதை ஆர்ஆர்ஆர் படக்குழு மிகப்பெரிய கார்ப்பரேட் லாபிக்குப் பின்னரே கைப்பற்றியது என்ற சர்ச்சையும் இன்னொருபுறம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றனர். கொரியா, இந்தியா போன்ற ஆசிய சந்தைகள் ஹாலிவுட் படங்கள் விற்பனைக்கு நல்ல தளமாக இருப்பதாலேயே இங்குள்ள படங்களுக்கு ஆஸ்கர் வழங்கி குளிர்விக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.