”என்னோட முதல் படத்தை பார்க்க 8 பேர் மட்டுமே வந்து இருந்தாங்க. என்னோட லைஃப் போயிடுச்சுன்னு உடஞ்சுட்டேன்” என்று நடிகர் கிருஷ்ணா உருக்கமாகப் பேசியுள்ளார். 


கழுகு பட நடிகர்




‘யாமிருக்க பயமேன்’, ‘கழுகு’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணா. இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணா தற்போது ‘ராயன் பரம்பரை’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மவுனகுரு தயாரிக்கும் இந்தப் படத்தை, ராம்நாத் இயக்கியுள்ளார். கிருஷ்ணாவுடன் சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், கஸ்தூரி, கே.ஆர். விஜயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி படமாக எடுக்கப்பட்ட ராயர் பரம்பரை வரும் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. 


இந்த நிலையில், படம் குறித்து பேசிய கிருஷ்ணா சினிமாவில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளைப் பற்றி உருக்கமாக பகிர்ந்து கொண்டார். “பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்த யாமிருக்க பயமேன் படத்தில் நடிக்க பெரிய நடிகர்களே தயங்கினார்கள். கழுகு படம் ஒரு டாக்குமெண்ட்ரி. அதில் என்னை நடிக்க வேண்டாம் என ஒரு சிலர் கூறினார்கள். ஆனால், யாமிருக்க பயமேன், கழுகு ஆகிய படங்கள் ஹிட் அடித்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன.


‘கமர்ஷியல் ரூட் எடுபடல..’


அந்த படங்களின் வெற்றிக்குப் பிறகு கமர்ஷியல் படத்துக்கு டிரை பண்ணேன். ஆனால், என்னை ரசிகர்கள் பிளாப் கொடுத்து மூஞ்சிலேயே அடிச்சிட்டாங்க. அதனால், எனக்கு  கமர்ஷியல் செட் ஆகாதுன்னு முடிவுக்கு வந்துட்டேன். நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்ற கிருஷ்ணா, “நான் நடித்த வன்மம் படத்தை பற்றி நானே பேசமாட்டேன். ஆனால், கோவை, ராமநாதபுரம் பக்கம் இருக்கும் ரசிகர்கள் வன்மம் பற்றி பேசறாங்க” என்றார்.




தொடர்ந்து பேசிய கிருஷ்ணா, “நான் பல தோல்விகளை பார்த்து தான் வந்தவன். அதோட வலி எனக்கு தெரியும். அலிபாபா படத்தை நானும் என் அப்பாவும் பார்க்க போனோம். தியேட்டருக்கு படம் பார்க்க 8 பேர் மட்டுமே வந்து இருந்தாங்க. அந்த எட்டு பேரும் லவ்வர்ஸ். அதுவும் ஓடாத படத்துக்கு வரும் லவ்வர்ஸ். என் படம் ஓடாதுன்னு வந்து இருக்காங்க.


‘4 பேர் தியேட்டர்ல இருந்தாங்க...’


என்னோட 2ஆவது படமான கற்றது களவு படத்தைப் பார்க்க தியேட்டர்க்கு போனபோது, தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 8 பேர்ல இருந்து 4 பேரா குறைந்தது. என் லைஃபே போச்சுன்னு உடைஞ்சு போயிட்டேன். 3வது படமாக கழுகு படத்துல நடிச்சேன். என் அப்பா இதான் உனக்கு கடைசி வாய்ப்பு என்றார். ஏற்கெனவே இரண்டு முறை விழுந்து எழுந்ததால் கழுகு வெற்றி எனக்கு பெரிதாக தெரியவில்லை” என சினிமாவில் தனக்கு ஏற்பட்ட ஆரம்ப கால தோல்விகளை பகிர்ந்து கொண்டார்.


ஓரளவுக்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக கூறிய கிருஷ்ணா, ராயர் பரம்பரைக்குப் பிறகு சைக்கோ கில்லர், கொலை சார்ந்த படங்களில், போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும், அதற்கான கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.