சீரியல்கள்... பெண்களின் ஏகோபித்த ஆதரவுடன் தவிர்க்க முடியாத டிஆர்பி மாத்திரைகளாக மாறிவிட்டன. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கிவருகின்றன. அவற்றுக்கு பாரபட்சம் இல்லாத ஆதரவும் கிடைத்து வருகிறது. பொழுதுபோக்கு சேனல்களின் ஒளிபரப்பில் பெரும்பகுதியை சீரியல்கள் ஆக்கிரமிக்க காரணமும் அதுவே. அப்படி ஒரு சீரியல் தான் ரோஜா. பிரபல சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் தொடர்.
தொடர்... நூறல்ல... ஐநூறல்ல... இன்றோடு 1000 அபிசோடுகளை எட்டுகிறது ரோஜா. அதாவது 3 ஆண்டுகள் என்றும் குறிப்பிடலாம். ஆண்டுகள் முன்றானாலும் இன்னும் முடிவுக்கு வராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது ரோஜா. கதை என்று பார்த்தால், இரண்டு வரியில் முடித்துவிடலாம்.
டைகர் மாணிக்கம் என்கிற வக்கீல், காரில் போகும் போது விபத்தாகிறது. அந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தை இறந்ததாக நம்பப்படுகிறது. டைகர் மாணிக்கம் பிழைத்துக் கொள்கிறார். ஆனால் அவரது மனைவி ஒரு மருத்துவனை நிறுவனரிடமும், குழந்தை காப்பாகத்திலும் தஞ்சம் புகுந்து வளர்கிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பின் அந்த குழந்தையின் அடையாளங்களை தெரிந்து கொண்ட சக காப்பக இளம் பெண் ஒருவர், அந்த பெண் தான் என அவரது தந்தையிடம் செல்கிறார். அவர் கொண்டு வந்த ஆடை உள்ளிட்ட சிறு வயது அடையாளங்களை நம்பி அனு என்கிற அந்த பெண்ணை டைகர் மாணிக்கம் ஏற்கிறார். தன் மனைவியின் தாயான அன்னபூரணி வீட்டில் மகளை விடுகிறார். அங்கு அன்னபூரணியின் மூத்த மகன் பிரதாப்பின் மகனான அர்ஜூனும் பிரபல வழக்கறிஞர். அவர் காப்பாகத்தில் இருக்கும் டைகர் மாணிக்கத்தின் உண்மையான மகளான ரோஜாவை தற்செயலாக மனைவியாக்கி வீட்டுக்கு வருகிறார்.
ரோஜாவை அர்ஜூனின் பாட்டி அன்னபூரணி வெறுக்கிறார். இதற்கிடையில் காப்பகத்தில் பையா கணேஷ் என்பவர் கொலை வழக்கு விசாரணை அர்ஜூனிடம் உள்ளது. அதில் அனுவும் அவரது தோழி சாக்ஷியும் தான் குற்றவாளிகள் என்பதால், வீட்டில் இருக்கும் அனுவை அர்ஜூன் எதிர்க்கிறார். அதற்கு அன்னபூரணி எதிர்ப்பு தெரிவிக்க, பாட்டி-பேரன் இடையே பனிப்போர்.
இதற்கிடையில் ரோஜா தான் உண்மையான வாரிசு என அர்ஜூனுக்கு தெரிகிறது. அதை நிரூபிக்க வேண்டும் என போராடுகிறார். பல முயற்சிகளும் தோல்வி ஆகிறது. இறுதியில் திடீரென பல ஆண்டுகளுக்குப் பின் இறந்ததாக கூறப்பட்ட ரோஜாவின் அம்மா செண்பகம், உயிரோடு வருகிறார்.
அவருக்கும் ரோஜா தான் தன் மகள் என தெரியும். ஆனால் அனுவை சமாளிக்க சில நாடகங்களை போடுகிறார்கள் . போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொடருக்குள் மற்றொரு தொடர் போய் கொண்டிருக்கிறது. சீரியலின் தொடக்கத்தில் திருமணமான அர்ஜூன்-ரோஜாவுக்கு இன்னும் முதல் இரவு நடக்கவில்லை. முதலில் ரோஜாவை வளர்த்த காப்பக நிறுவனரை சிறையிலிருந்து மீட்டு வந்தால் தான் முதல் இரவு என முடிவு செய்தார்கள். அதன் பின் இப்போது ஏதேதோ காரணம் சொல்லி, இப்போது தான்(அதுவும் 2 வாரமாக) நேரம் கூடி வந்திருக்கிறது.
அந்த முதலிரவை தடுக்க அனு திட்டமிடுகிறார். அதை வழக்கம் போல அர்ஜூன் முறியடிக்கிறார். இப்படி தான் இன்றைய 1000 வது எபிசோட் வரவிருக்கிறது. இன்றைய எபிசோடின் சாரம்சம் என்ன தெரியுமா... அர்ஜூனுக்கும்-ரோஜாவுக்கும் முதல் இரவு நடக்குமா... இல்லையா... என்பது தான்.
ஒரு தொடரை தொடர் வண்டியாக எப்படி இழுத்துச் செல்லலாம் என்பதை இந்த தொடரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நடித்த நடிகர்கள் பலர் மாறிவிட்டனர். ஆனாலும் தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சண்டை, காதல், டூயட், சேஸிங் என சினிமா எடுப்பதாக நினைத்தே ரோஜாவை இயக்குனர் இயக்கிக் கொண்டிருக்கிறார். திடீரென சந்திரகாந்தா என்ற பெண் போலீஸ் அதிகாரி வருவார்... வீட்டில் சிசிடிவி கேமராவில் ஒவ்வொரு முறை சிக்கியும் கூட, மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து சிசிடிவியில் அனுவும் அவருக்கும் உதவும் பாலு மற்றும் யசோதா ஆகியோர் சிக்குவதும் 100 முறையாவது நடந்திருக்கும்.
இப்படி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது... இல்லை இல்லை மலர்ந்து கொண்டிருக்கிறது ரோஜா.
ஆனால் அதையெல்லாம் கடந்து, ரோஜா... பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற சீரியல். அதனால் தான் 1000 எபிசோடை கடந்தும் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அதன் ரசிகைகள் கூறுகின்றனர். அர்ஜூன்-ரோஜா முதல் இரவுக்கே 3 வருசமாச்சு... இன்னும் குழந்தை பிறந்து அதை பார்க்க எத்தனை வருசம் ஆகுமோனு... கிண்டல் அடிப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.