நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், அவரின் பேரன் நட்சத்திரன் காதணி விழா நாளை நடைபெறுவதாக இருந்த த்காவல் வெளியாகி உள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால், நேற்று இரவு திடீரென உயிர் இழந்தார். சின்னத்திரை நடிகரும் பாடி பில்டரும் நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா. அவருக்கும் அவரின் மாமா கார்த்திக் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களில் வளைகாப்பு விழாவும் விமரிசையாக நடைபெற்றது.
நட்சத்திரனின் காது குத்து விழா
பின்பு இந்திரஜா – கார்த்திக் தம்பதிக்கு மகன் பிறந்தார். இவருக்கு நட்சத்திரன் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் பேரனும் இந்திரஜாவின் மகனுமான நட்சத்திரனின் காது குத்து விழா நாளை (செப். 20) மதுரையில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து அடுத்த நாள் கிடா விருந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக அச்சிடப்பட்டு இருந்த அழைப்பிதழில், ’’கிழக்குச் சீமையிலே மானுத்து மந்தையிலே என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். மானுத்து சீமையிலே காது குத்து விழா நடைபெறுகிறது. அனைவரின் வருகையாலும் காது குத்தும் விழா நிறைவு பெறும்’’ என்று அழைக்கப்பட்டு இருந்தது.
2 நாட்கள் முன்பு உயிரிழந்த சோகம்
இந்த நிலையில், உடல்நலப் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பேரனின் காது குத்து விழாவுக்கு 2 நாட்கள் முன்பு அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக, நெட்டிசன்களும் ரசிகர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.