பிரபல நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் “நெவர் எஸ்கேப்” என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திகிலூட்டும் திரைக்கதை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராபர்ஸ் மாஸ்டர் படம் பற்றிய சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது, ‘இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்ல வந்தபோது நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்படத்துக்காக நான் மொட்டை அடிக்க வேண்டும் என கேட்டார்கள். நான் நடித்துக் கொண்டிருந்த படக்குழுவிடம் அனுமதி வாங்கி இந்த படத்தில் நடித்தேன்’ என தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அதில் பிக்பாஸ் தொடர்பான கேள்விகளும் முன்வைக்கப்பட்டது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே என்னை கலந்துக் கொள்ள கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மிகவும் பிஸியாக இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. உள்ளே நடப்பது உண்மையா, பொய்யா என பார்க்கத்தான் பிக்பாஸ் சென்றேன். அந்த அனுபவம் நன்றாக இருந்தது என ராபர்ட் மாஸ்டர் கூறினார். 






என்னை பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியே வ் வீணான ஒன்று தான். எனக்கென ஒரு பெயர் இருக்கிறது. நான் உள்ளே சென்றது பணம் சம்பாதிக்க தான். கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பெயர் உள்ளது. அவரும் பணம் சம்பாதிக்க தானே வந்தார். கமலின் சம்பளம் எவ்வளவு என்பது அனைவருக்கும் தெரியும். உள்ளே நடக்கும் பல காட்சிகளை கட் பண்ணி விடுகிறார்கள். நான் எல்லோரிடமும், சண்டை போடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி பண்ணலாம் என சொல்வேன். ஆனால் அது ஏதேச்சையாக வந்து விடுகிறது. என்னுடைய பொண்ணு குயின்ஸியை கூட பிறந்தநாளுக்கு கூப்பிட்டேன். ஆனால் வருகிறேன் என சொல்லி விட்டு வரவில்லை. உள்ளே இருக்கும் வரை தான் சொந்தம் எல்லாம். வெளியே வந்தால் எதுவும் கிடையாது” என ராபர்ட் மாஸ்டர் தெரிவித்தார். 


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடனத்தில் கலக்கியவர் ராபர்ட் மாஸ்டர். இவரது நடன அசைவுகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் ராபர்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற நடிகை ரச்சிதாவிடம் அவர் நடந்துக்கொண்ட விதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 49வது நாளில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.