ஆர் ஜே பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல்

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்திற்கு பின் அவர் தற்போது நடித்துள்ள படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனமீர்த்துள்ளது.

Continues below advertisement

இதற்கு முன்பாக ஆர் ஜே பாலாஜி  நடித்த படங்கள் பெரும்பாலும் காமெடி கதைக்களத்தை கொண்டிருப்பவை. ரன் பேபி ரன் ஒரு படம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக த்ரில்லர் ஜானரில் அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது சொர்க்கவாசல் திரைப்படமும் ஆர் ஜே பாலாஜி இதுவரை நடித்திராத ஒரு கதைக்களமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க சிறைச்சாலையில் நடக்கும் இப்படம் ரத்தம் தெறிக்கும் ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி இருப்பதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது . பாலாஜி சக்திவேல், செல்வராகவன் , கருணாஸ் போன்ற சிறந்த நடிகர்கள் இந்த படத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளது கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

சூர்யா 45

நடிப்பு தவிர்த்து ஆர் ஜே பாலாஜி சூர்யாவின் 45 ஆவது படத்தையும் இயக்கவிருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரு படங்களை ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ளார் .