பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு புதிய படங்களின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளன. சூர்யா நடித்து நீண்ட நாளாக ரசிகர்கள் காத்திருக்கும் கருப்பு படக்குழு சார்பாக படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்
சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் நீண்ட நாளாக ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டாமல் இருந்து வருகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளி , புத்தாண்டு , பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகள் கடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை செய்யப்பட்டாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருப்பு படம் குறித்து சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி
கருப்பு பட ரிலீஸ் குறித்து ஆர்ஜே பாலாஜி
" சூர்யா ரசிகர்கள் , சினிமா ரசிகர்கள் மற்றும் கருப்பு ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இன்று பொங்கல் வாழ்த்துக்கள் என்று எந்த போஸ்டரும் வெளியாகாது. தீபாவளி , புத்தாண்டு , ரம்ஜான் என எல்லா பண்டிகைக்கும் சேர்த்து 473 போஸ்டர்கள் வெளியிட்டுவிட்டோம். இன்று எந்த போஸ்டரும் வெளியாகாது. இன்னொரு நல்ல செய்தி அடுத்தபடியாக படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் படத்தின் ரிலீஸ் தேதியோடு வெளியாகும். அதுவரை கருப்பு படத்தைப் பற்றிய எந்த மெட்டிரியலும் வெளிவராது . எப்போ வந்தாலும் கருப்பு படம் நிச்சயம் உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம். அதற்காக நிறைய வேலை செய்துகொண்டு இருக்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு சிறப்பான ஆண்டாக அமையட்டும். பொங்கல் வாழ்த்துக்கள் ' என்று ஆர்ஜே பாலாஜி இந்த வீடியோவில் கூறியுள்ளார்