என் குழந்தைப்பருவ இழப்புகள் தான் நான் எனது 23 வயதை எட்டியபோது என்னை வலிமையான நபராக மாற்றியது என்று கூறியுள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.


யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி:


என் குழந்தைப்பருவ இழப்புகள் தான் நான் எனது 23 வயதை எட்டியபோது என்னை வலிமையான நபராக மாற்றியது. குழந்தைப் பருவ மனக்கசுப்புகள் எனக்கு மட்டும் தான் நேர்ந்தது என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஒரு பாதிப்பு இருந்திருக்கலாம். உண்மையில், என் குழந்தைப்பருவ இழப்புகள் தான் நான் எனது 23 வயதை எட்டியபோது என்னை வலிமையான நபராக மாற்றியது.


நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு ஒரு பெண் தோழியாக இருந்தார். நாங்கள் மூன்றாவது படிக்கும்போது தான் எங்கள் இருவருக்குமே எங்களுக்கு இடையே இருந்தது நட்பு மட்டுமல்ல காதல் எனத் தோன்றியது. நாங்கள் அதை உணர்ந்த போதே அது இருவர் வீட்டுக்கும் தெரிந்து விட்டது. கல்லூரி காலத்தில் நான் ஒரு அராத்து பையன். நிறைய அரியர்ஸ் இருந்தது. வீட்டின் முதல் பட்டதாரி. அப்பா பொறுப்பற்றவர். குடும்ப பேக்கிரவுண்ட் ஏதுமில்லை. இப்படி ஒரு பையனுக்கு யார் தான் அவர்கள் பெண்ணை திருமணம் செய்து தருவார்கள். அந்த எதிர்ப்பு தான் என் மனைவி வீட்டு வழியிலும் வந்தது. அதனால் அதை முறியடிக்க என் 21 வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன்.


என் காதலி திவ்யா ஒரு நாள் திடீரென ஃபோன் செய்து நான் வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன் என்றார். நான் அப்போது பிஜி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். உடனே என் சாரிடம் ரூ.1500 பணம் வாங்கிக் கொண்டு அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்தேன். அப்புறம் 2 நாட்கள் தலைமறைவாகவே இருந்தோம். அதுவே ஒரு தனி திரைக்கதை போல் சொல்லலாம்.




திருமணம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் என் மனைவியின் வீட்டுக்குச் சென்றோம். எனக்கோ உள்ளுக்குள் பயம். எங்கே என்னை போட்டுத்தள்ளி விடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் அவர் வீட்டாரோ வாங்க மாப்பிள்ளை என்றனர். அடப்பாவிங்களா இதை முதலிலேயே சொல்லியிருந்தால் அப்புறமா கல்யாணம் பண்ணியிருப்பேனே என நினைத்துக் கொண்டேன். நான் திருமணம் செய்து கொண்ட நாளிலேயே என் அப்பா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் ஏதாவது சாக்கு தேடிக் கொண்டிருந்தார். நான் திருமணம் செய்து கொண்ட காரணத்தைச் சொல்லி வெளியேறி விட்டார். என்னால் எனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 


பயமாக இருந்தது..
முதலில் எப்படியும் சமாளிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ரொம்ப பயமாக வேற இருந்தது. எனக்கு ரேடியோ மிர்சியில் வேலை. ரூ.9500 சம்பளம். அதில் நானும் என் மனைவியும் கோவையில் இருக்க வேண்டும். என் குடும்பத்தினர் சென்னையில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னைப் பார்த்தாலே எல்லோரும் ஓடுவார்கள். 100ஐ கொடு 200ஐ கொடு என்று கூசாமல் கேட்டுவிடுவேன். ஆனால் இன்று போராடி வளர்ந்துவிட்டேன். இன்றைக்கு சினிமாவில் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சாதித்துக் கொண்டிருக்கிறேன். பிரம்மாண்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் இல்லை எனத் தோன்றுகிறது. அதைத் தான் நான் என் படங்களில் கொடுக்கிறேன். என் வாழ்வில் நான் கடந்து வந்தவற்றை நான் படத்தில் புகுத்துகிறேன்..


இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.