சென்ற ஆண்டு சத்தமே இல்லாமல் வெளியாகி நாடு முழுவதும் கவனமீர்த்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் காந்தாரா.


கர்நாடகாவைச் சேர்ந்த ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் கேஜிஎஃப் 1&2 படங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது.


16 கோடியில் 400 கோடி வசூல்


கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம், வெறும் 16 கோடி செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டு சினிமாத்துறையினர், ரசிகர்கள் என அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது.


இந்நிலையில் காந்தாரா படத்தின் அடுத்த பாகத்துக்குப் பதிலாக முந்தைய பாகத்துக்கான கதையை படக்குழு தயார் செய்து வருவதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின.


 






இப்படம் வெளியாகி நேற்றுடன்100 நாள் நிறைவடைந்த நிலையில் காந்தாரா படத்தின் முந்தைய பாகம் குறித்து ரிஷப் ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். 


காந்தாரா முந்தைய பாகம்


”காந்தாராவின் மீது அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் காட்டிய பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 


கடவுளின் ஆசீர்வாதத்துடன் காந்தாரா வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். காந்தாராவின்  முந்தைய பாகத்தை அறிவிக்கிறேன்.


நீங்கள் பார்த்தது உண்மையில் பாகம் 2. பாகம் 1 அடுத்த ஆண்டு வரும்.  காந்தாரா படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது இந்த யோசனை எனக்குள் உதித்தது.  ஏனென்றால் இதன் வரலாறு மிகவும் ஆழமானது. கதையைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது  மேற்படி விவரங்களை தோண்டிக் கொண்டிருக்கிறோம்.


கதை குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து வருவதால், படத்தைப் பற்றிய விவரங்களை மிக விரைவாக வெளியிட விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


மாடுபிடி விளையாட்டான கம்பாலாவில் ஈடுபடும் ரிஷப் ஷெட்டிக்கும் வன அலுவலருக்கும் இடையேயான பிரச்னை, நாட்டுப்புற தெய்வ வழிபாடான பூதகோலா ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காந்தாரா படம் சென்ற ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைக் குவித்தது.


வராஹ ரூபம் சர்ச்சை


எனினும் இப்படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் தாய்க்குடம் ப்ரிட்ஜ் இசைக்குழுவின் நவரசம் பாடலை காப்பியடித்து இசையமைக்கப்பட்டதாக கோழிக்கோடு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பல திரைத்துறையினரும் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாடலை பயன்படுத்த திரையரங்கம், ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்திலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த வழக்குக்கான உரிய ஆவணங்களை தாய்க்குடம் பிரிட்ஜ் சமர்ப்பிக்காத நிலையில், பாடலின் மீதான தடை சென்ற டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.