பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு கிடைத்த அமோகமான வரவேற்பை தொடர்ந்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் 2023ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனும் செய்தி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பாராட்டு :
ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் 2022ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த படத்தின் திரைக்கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பு. காந்தாரா படத்தின் தயாரிப்பாளர் இப்படத்தினை ஆஸ்கர் 2023க்கு பரிந்துரைக்கு அனுப்பியதை உறுதி செய்துள்ளார்.
உலகெங்கிலும் பாராட்டுகளை குவித்த இப்படம் தி அகாடமி விருதுகளில் இடம்பிடிக்க முயற்சிக்கிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "காந்தாரா திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளோம். இறுதி பரிந்துரைகள் இன்னும் வராததால் மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறோம். இப்படத்தின் கதை மிகவும் ஆழமானது என்பதால் உலகளவில் இப்படத்திற்கு குரல் எழுப்பப்படும் என நம்புகிறோம்" என தெரிவித்து இருந்தார் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர்.
ஏ லீக் கிளப்பில் இணைந்த காந்தாரா :
2022ம் ஆண்டு வெளியான இந்திய படங்களில் முதலில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது ஆர்.ஆர்.ஆர். திரைப்படமாகும். இப்படம் சிறந்த இயக்கம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என 14 பிரிவுகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாகுபலி, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர். மற்றும் புஷ்பா படங்களின் வரிசையில் ஏ லீக் கிளப்பில் இணைந்துள்ளது. திரை பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் குவித்துள்ளது. உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுடன் ஒரே வாரத்தில் கர்நாடகாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.