சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து. இவர் இன்று காலை சீரியலின் டப்பிங் பேசி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த நடிகர் மாரிமுத்து ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கும் முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம். கம்பீரம், கர்வம், குசும்பு, நக்கல், நையாண்டி, திமிர், கிரிமினல் புத்தி என அத்தனை அடாவடியான குணாதிசயங்களையும் ஒன்று சேர்ந்த ஒரு கதாபாத்திரமாக ஆணாதிக்கம் கொண்டவராக மிக சிறப்பாக வெளிப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து. 



சிறு வயது முதலே கஷ்டப்பட்டு குடும்பத்தையும்,தங்கை தம்பிகளையும் கரையேற்றிய ஒரு மூத்த அண்ணனாக அவர்களை அடக்கி ஆளும் ஒரு கம்பீரமான கதாபாத்திரத்தின் நடிப்பை பிசிறு இல்லாமல்  வெளிப்படுத்தினார். அது நடிப்பு என்பதை கூட ரசிகர்கள் உணராத வகையில் அத்தனை யதார்த்தமாக கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க கூடியவர். மாரிமுத்துவின் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பு இதயத்தை கனமாக்குகிறது.


சமீபகாலமாக புகழின் உச்சத்தில் மிதந்த மாரிமுத்து இப்படி திடீரென சரிவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் வசந்த், இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகி ஜோவின் அப்பாவாக அவரின் கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் கூட முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாரிமுத்து. 


சில வாரங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் போட்டியாளராக மாரிமுத்து கலந்து கொண்டார். அவருடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ். சிவாஜியும் கலந்து கொண்டார். மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த இரு திறமையான நடிகர்களுமே இன்று உயிருடன் இல்லை. கடந்தவாரம் உடல் நல குறைவால் ஆர்.எஸ். சிவாஜி காலமாக இன்று நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிர் இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.