உயிருள்ளவர்கள் கதையில் வருவதை விட, கதை உயிரோட்டமாக பயணிப்பது, இயக்குனர் வஸந்த் படத்தில் சர்வசாதாரணம். அவரது படங்கள் எல்லாமே, உறவுகளோடு, உணர்வுகளோடு பயணிக்கும். அப்படி அவரது படைப்புகளில் ஒன்றாக 2000 வது ஆண்டில் செப்டம்பர் 15 ம் தேதி இதே நாளில் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியானது ரிதம் திரைப்படம். 


நான்கு இதங்கள் இரண்டாக மாறி, அந்த இரண்டு இதயங்கள் ஒன்றாகும் கதை. கதைப்படி, கணவரை இழந்த பெண்ணும், மனைவியை இழந்த ஆணும், எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்கள். அவர்களின் சந்திப்பு, அந்த பெண்ணின் மகனோடு அந்த ஆணுக்கு நல்லுறவை ஏற்படுத்துகிறது. மகன் விரும்பும் அந்த ஆணை, தாய் வெறுக்கிறார். அடுத்தடுத்து எதிர்பாராத சந்திப்புகள் வரும் போது, அந்த ஆணை உதாசீனப்படுத்துகிறார். 






எப்படியாவது தனது மகனுக்கு திருமணம் ஆகிவிடாத என்று ஏங்கும் பெற்றோர். ஆச்சாரத்துடன் வாழும் தன் கணவர் குடும்பத்தாருக்கு தன்னால் எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என தன் ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்து வைராக்கியத்துடன் வாழும் பெண். இப்படி இரு வேறு கோணங்களில் பயணிக்கும் கதை.


ஒரு கட்டத்தில், அதே பாசமும், அன்பும் சேர்ந்து ஒரு காதலை சேர்த்து வைப்பது தான் ரிதம். ஒரு பாடலுக்கு ரிதம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாழ்வில் காதல் முக்கியம்; அந்த காதலும் எதையும் கடந்து, எதற்காக துணிந்து வர வேண்டும் என்பதை மறைமுக சொல்லி, இரு குடும்பத்தை இணைக்கும் உருக்கமான கதை.






ஜோதிகா-அர்ஜூன் ஜோடி, ரமேஷ் அர்விந்த்-மீனா ஜோடி. இதில் ஜோதிகாவும், அர்விந்தும் இறக்க, தனிமையான அர்ஜூன்-மீனா இணைவது தான் ரிதம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வரலாற்றை பார்த்தால், அவரது சிறந்த ஆல்பங்களை திரும்பிப் பார்த்தால் அதில் ரிதம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு ரிதம் படத்தின் பாடல்கள், மிக மிக அழகான, அனுபவமான பாடல்கள். 


22 ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் இசையாகவும், ஒலியாகவும், ஒளியாகவும் நம்மைச் சுற்றிக் கொண்டே வரும் ஒரு சூறாவளி ‛ரிதம்’.