நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு விஜய் அந்த படத்தை தயாரித்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கொடுத்த அந்த பேட்டி நேற்று ஒளிபரப்பாகியிருக்கிறது. அதில், விஜய் பேசிய விஷயங்கள் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நீண்ட காலம் கழித்து விஜய் கொடுத்திருக்கும் அந்த பேட்டி எப்படியிருந்தது என்பதை பற்றிய சுவாரஸ்சியமான அலசல் இது!
விஜய் படங்களுக்கு அதன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி எப்போதுமே பெரிய மைலேஜாக இருக்கும். அதில் அவர் பேசும் விஷயங்கள் அடுத்த சில நாட்களுக்கு விவாதமாகி படத்திற்கும் நல்ல ப்ரமோஷனாக அமையும். ஆனால், இந்த பீஸ்ட் படத்தை முடித்து சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நெருக்கடியான கடைசிக்கட்டத்தில் நடந்ததால் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் ஆகியிருந்தது. அதை ஈடு செய்யும் வகையிலேயே விஜய்யின் இந்த பேட்டி தயாரானது.
10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் நேருக்கு நேர் என இந்த பேட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. விஜய்யின் இசை வெளியீட்டு விழா மேடைப்பேச்சுகள் எப்போதுமே நேர்த்தியான முன் திட்டமிடலுடன், இதை இப்படித்தான் பேசப்போகிறோம் என்ற தெளிவோடு இருக்கும். அதுதான் அவரின் பேச்சிற்கென்றே தனி ரசிகர்களை உருவாக்கியிருந்தது. கிட்டத்தட்ட அதே அளவுக்கான முன் தயாரிப்புடனேயே விஜய் இந்த பேட்டியிலும் பங்கேற்றதாக தெரிகிறது. கேள்வி கேட்ட இயக்குனர் நெல்சனுமே வழவழவென இழுக்காமல் விஜய் எதையெல்லாம் பேச விரும்புகிறாரோ அதை முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையிலேயே கேட்டிருந்தார்.
விஜய்யின் இசை வெளியீட்டு விழா மேடைப்பேச்சுகள் எப்படி இருக்கும்? ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவரின் குரலிலேயே ஒரு பாட்டு, எதுகை மோனையில் படத்தில் உடன் பணி புரிந்தவர்களை நோக்கி ஒரு கலாய், ஒரு குட்டி கதை, சமீபத்தில் சென்சேஷனலான ஒரு பிரச்சனையை குறித்த அவரின் சுருக்கமான கருத்து, இடையிடேயே அரசியல் நெடி வீசும் பன்ச்கள் இவைதான் விஜய்யின் இசைவெளியீட்டு விழா பேச்சின் சாராம்சங்களாக இருக்கும். கிட்டத்தட்ட இதே ஃபார்மட்டில்தான் விஜய்யின் பேட்டியும் இருந்தது. மேலும், சமீபத்தில் விஜய் சார்ந்து வெளியான சர்ச்சைகள், விமர்சனங்கள், வதந்திகள் போன்றவற்றிற்கும் அவர் தரப்பு விளக்கத்தை முன் வைக்கும் வகையிலும் இந்த பேட்டி அமைந்திருந்தது.
சமீபத்தில் விஜய் பற்றிய செய்திகள் என்னவெல்லாம் வந்திருந்தது என யோசித்து பாருங்கள். விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்குமான முரண், விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரம், ஓட்டு போட சைக்கிளில் சென்றது, உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் பங்கேற்றது, விஜய் மகனின் சினிமா எண்ட்ரி என சமீப காலங்களில் விஜய் சார்ந்து பேசப்பட்ட அத்தனை விஷயங்களுக்கும் விஜய் தரப்பின் விளக்கம் என்ன என்பது நேரடியாக அவரிடமிருந்து ஒரு அறிக்கையாக வந்ததே இல்லை. ஆனால், இந்த பேட்டி. அதற்கெல்லாம் விஜய் தரப்பின் பதில் என்ன என்பதை வெளிக்கொண்டு வந்திருந்தது. சில கேள்விகளுக்கு நேரடியாகவும் சில கேள்விகளுக்கு மேலோட்டமாகவும் விஜய் பதில் கூறியிருந்தார்.
எஸ்.ஏ.சி - விஜய் தந்தை மகன் முரண்பாடு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. பெற்றோர்களை மதியுங்கள் என கருத்துக்கூறும் விஜய்யே அவரின் தந்தையை அவமதிக்கிறார் என விஜய்யின் மீது இந்த விஷயத்தில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை பற்றி விஜய் வெளிப்படையாக பேசாவிட்டாலும் 'அப்பாக்கள் வேர்களை போன்றவர்கள். கடவுளுக்கும் அப்பாக்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். கடவுளை பார்க்கமுடியாது. அப்பாவை பார்க்க முடியும்' என செண்டிமெண்ட்டாக பேசியிருந்தார். எஸ்.ஏ.சி - விஜய் சார்ந்த சமீபத்திய சர்ச்சைகளுக்கு இந்த பதில் ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் என விஜய் நம்பியிருக்கக்கூடும்.
விஜய் மட்டுமில்லை. விஜய் வீட்டு கார், சைக்கிள்கள் முதலான வண்டி வாகனங்கள் கூட இப்போதெல்லாம் அதிகமாக சர்ச்சைக்குள்ளாவதையும் விஜய் அளவுக்கு அவற்றுக்கும் செய்திகளில் இடம் கிடைப்பதையும் பார்த்து வருகிறோம். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்திருந்தார். குறியீடு குமார்கள் விஜய்யின் சைக்கிள் நிறம் தொடங்கி அக்கு அக்காக பிரித்து மேய்ந்து விஜய் இந்த கட்சிக்குதான் சப்போர்ட் செய்கிறார். அந்த கட்சிக்குதான் சப்போர்ட் செய்கிறார் என அடித்துவிட்டார்கள். இது சார்ந்து ஏன் சைக்கிளில் சென்றீர்கள்? என நெல்சன் ஒரு கேள்வியை போட, அதற்கு விஜய் 'வீட்டுக்கு பின்பக்கம்தான் வாக்குச்சாவடி இருந்தது. ஓட்டு போட செல்லும்போது மகனின் ஞாபகம் வந்துவிட்டது. அதனால்தான் சும்மா சைக்கிளில் சென்று வந்தேன். அதன்பிறகு, பேசப்பட்ட விஷயங்களை வைத்துதான் ஓ...இப்படியெல்லாம் உண்டா என்று தெரிந்துக்கொண்டேன்' என விஜய் கூறியிருந்தார். வேலை வெட்டியின்றி கோக்குமாக்காக குறியீடுகள் கண்டுபிடிப்பவர்களின் முகத்தில் விஜய் Wasted முத்திரையை குத்தி தனது பேட்டி மூலம்வேடிக்கை பார்த்திருக்கிறார்.
நடிகர்கள் செய்யும் விஷயங்களை ஒரு எல்லைக்கு மேல் நுணுக்கமாக சென்று அலசி ஆராயக்கூடாது. அப்படி ஆராயும் விஷயங்கள் வெங்காயம் போன்றுதான் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது என்பதற்கான சான்றுதான் விஜய்யின் இந்த பதில். அந்த ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசாவிடிலும், விஜய் பீஸ்ட் படக்குழுவினரை ரோல்ஸ் ராயல்ஸ் காரில் ஊர் சுற்ற அழைத்து சென்ற வீடியோ ஒளிபரப்பட்டது. ஆக, விஜய் அந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை விடுவதாக இல்லை.
விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்ட விஷயம்தான் சமீபத்தில் விஜய் சார்ந்து அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது. அதுசார்ந்த கேள்விகளையும் விஜய்யிடம் நெல்சன் கேட்டார். இசை வெளியீட்டு விழாவில் ஒரு அரசியல் பன்ச் வைப்பாரே, கிட்டத்தட்ட அதற்கு ஒத்த இடம் இது. இன்று தளபதியாக இருக்கிறீர்கள், நாளை தலைவனாக மாறுவீர்களா? என நெல்சன் கேட்க பீஸ்ட்டின் ட்ரெய்லர் டயலாக்கான 'I'm not a Politician' என விஜய் ஜகா வாங்கிவிடுவாரோ என தோன்றியது. ஆனால், இந்த கேள்விக்கு எதிர்பார்த்ததை விட விஜய் நேரடியாக பதில் கூறினார். 'ரசிகர்கள் விருப்பப்பட்டால் அப்படி ஒரு சூழல் அமைந்தால் தலைவனாவேன். நான் பீஸ்ட் விஜய்யாக இருக்க வேண்டுமா பூவே உனக்காக விஜய்யாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய அனுமதியுடனே ரசிகர்கள் போட்டி போட்டதையும் உறுதிப்படுத்தினார். விஜய்யின் ஒவ்வொரு இசைவெளியீட்டு விழாவும் ஏற்படுத்தும் அவரின் அரசியல் வருகை குறித்த விவாதத்தை இந்த பதிலின் மூலம் இந்த பேட்டியும் ஏற்படுத்த தவறவில்லை. விஜய்க்கு ஆளும்தரப்பு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கிறது. டி.வி பேட்டிக்கான ப்ரோமோவில் கூட தளபதி என விஜய்யை குறிப்பிடவில்லை போன்ற சர்ச்சைகள் அந்த சேனல் சார்ந்து எழுந்திருந்தது. அரசியல் எண்ட்ரி குறித்த விஜய்யின் பதிலுக்கு பெரிதாக கத்தரி போடாமல் வெளியிட்டு சேனலும் தங்கள் மீதிருந்த சர்ச்சையை இந்த இடத்தில் போக்க முற்பட்டிருந்தது.
அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்களுக்கு நாட்டு நடப்பு எதாவது தெரியுமா? எனும் கேள்வி எப்போதும் கேட்கப்படும். இதற்கும் விஜய் பதில் கூறியிருந்தார். 'இப்போதெல்லாம் சினிமா செய்திகளை தாண்டி, எல்லா செய்திகளையும் படிக்கிறேன்' என கூறிவிட்டு சமீபத்தில் காவலர் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியின் போது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்.இரண்டு மூன்று நாட்களில் மறக்கப்பட்ட அந்த செய்தியை குறிப்பிட்டு பேசுவதன் மூலம் நான் அத்தனை நுணுக்கமாக இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்து கவனித்துக் கொண்டே இருக்கிறேன் எனும் பிம்பத்தை உருவாக்க முயன்றிருந்தார்.
மதரீதியான தாக்குதல்களில் அடிக்கடி சிக்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அப்படி மதத்தை முன் நிறுத்தி விமர்சிபவர்களுக்கு பதிலடியாக 'எனது பெற்றோர் இந்து கிறிஸ்துவம் இரண்டு மதங்களையும் சேர்ந்தவர்கள். சர்ச்சுக்கு செல்வதை போல கோவிலுக்கும் செல்கிறேன். மசூதிக்கும் செல்கிறேன். என் பிள்ளைகளுக்கும் அதையேத்தான் சொல்லி வளர்க்கிறேன்' எனக்கூறியிருந்தார்.
கடைசியாக அந்த குட்டி கதை அதுவும் ஹைலைட்டாக அமைந்தது. புல்லாங்குழலையும் ஃபுட் பாலையும் ஒப்பிட்டு நாலு பேருக்கு நல்லது பண்ணுங்க எனும் கருத்தோடு கதையை முடித்திருந்தார். இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கடந்து விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்கும் விதம், தன்னுடைய மகனின் சினிமா எண்ட்ரி போன்றவற்றை பற்றியும் சுவாரஸ்யமாக பேசியிருந்தார்.
ஒரு குட்டி கதை, ஒரு அரசியல் பன்ச், சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு செய்தி இடையிடையே கொஞ்சம் கிண்டல் கேலி என அப்படியே விஜய்யின் ஆடியோ லான்ச் பேச்சுக்கு ஒத்த அம்சங்களுடனேயே இந்த பேட்டியும் அமைந்திருந்தது.
கடைசியில் ஜாலியோ ஜிம்கானா பாட்டை பாடி விஜய் பேட்டியை முடித்துக் கொண்டார். அந்த பாட்டை போன்றே பேட்டியும் நல்ல முன் தயாரிப்புடன் ஜாலியாக அமைந்திருந்தாலும் இடையிடையே விஜய் சில அரசியல் வெடிகளையும் கொளுத்தி போட்டிருக்கிறார். அதெல்லாம் ராக்கெட்டாக சீறிப்பாயுமா? புஸ்வாணமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.