தமிழ் சினிமா பல உன்னத கலைஞர்களைக் கண்டெடுத்துள்ளது. அப்படி, தமிழ் சினிமாவிற்கு தன் திறமையால் பெருமை சேர்த்த சின்ன கலைவாணர் விவேக், தன் நகைச்சுவை டயலாக்குகள், பஞ்ச் மூலம் சமூக கருத்துக்களை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்த்தார். நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டுமல்ல, ஒரு நல்ல நகைச்சுவை மற்றவர்களை சிந்திக்கவும் தூண்ட வேண்டும். அந்தவகையில், நகைச்சுவையின் ஊடே முற்போக்கு கருத்துகளை உதிர்த்தவர் மக்கள் கலைஞர் விவேக். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல், தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையைக் கோலோச்சியவர். சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தியர் என்பது அவருடைய சமூக அக்கறைக்கு ஒரு சாட்சி என்றே சொல்லலாம்.




விவேக், ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், கே.பாலச்சந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படித்திலிருந்துதான் பிரபலமான முகமாக மாறினார். நிரந்தமில்லா வாழ்க்கையில், எப்போதும் நிரந்தரமானவைகள் பற்றி சிந்திக்கும் மனிதனின் பழக்கத்திற்கு, நிஜத்தை உரைக்கும் விதத்தில் இந்தத் திரைப்படத்தில் அவருடைய வசனம் அமைந்திருந்தது.


‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனத்தின் மூலம், இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அனைவருக்கும் நினைவூட்டியிருப்பார். இந்த வசனம் மக்களிடம் அவரை பிரபலப்படுத்தியது எனலாம். பிறகு, விவேக் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.


 


விவேக்கின் பஞ்ச் டயலாக்குகள் காலம் கடந்தும் நெஞ்சில் நிற்பவை. அவற்றில் சில.


“அடேய் அற்ப பதர்களா... உங்களை எல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா..."


டேய் டேய் அவா வேற வர்ணம் டா.


அவாளும் வரணும்ங்கிறது தான் என் பிரியம்.


வர்ணம்ங்கிறது கொடில தாண்டா இருக்கணும். மக்கள் மனசுல இருக்கப்படாதுடா.


அவா வேற ஜாதிடா!


டேய்.. அவா அவாங்கிறியே.. அவா யாருடா?


இந்த ரோட்ட போட்டது அவா!


உங்க வீட்டை கட்டுனது அவா!


ஏன் ஓட்டுப்போடுறது அவா!


உங்க டிரைஸ்சை துவச்சி கொடுக்குறது அவா!


தம் கட்டி ட்ரேயினேஜ்குள்ள போய் அதை சுத்தம் பண்றது அவா!


அரிசி, கோதும, ரவா - இதையெல்லாம் விளைய வைக்கிறது அவா!


மொத்தத்துல அவா இல்லாட்டி நமக்கெல்லாம் ஏதுங்க புவா!!


என்ற வசனத்தின் மூலம் சாதி பாகுபாடு குறித்து சாடியிருப்பார்.



மூட நம்பிக்கைகள் குறித்தும், அறிவார்த்தமாக சிந்திப்பது ஏன் அவசியம் என்று சொல்லியிருப்பார். மின்னலே படத்தில் ஒரு சீனில், லாரி-பைக் மோதி எற்படும் விபத்தில், லாரியில் கட்டப்பட்டிருக்கும் எலுமிச்சைப் பழத்தின் மூலம் மூட நம்பிக்கையை கலாய்த்திருப்பார்.


‘இத ஏண்டா இங்க தொங்க விட்டிருக்கீங்க...’ என கேட்பார்.


 அதற்கு அவர், ‘லாரி நல்லா ஓடனும்னு ஓனர் தொங்கவிட்டிருக்கிறார்...’ என்று பதிலளிக்க,


‘ஏண்டா லாரிக்குள்ள 750 ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு அதுல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம்பழத்திலயா ஓடும்... உங்களலாம் திருத்தவே முடியாது...’ என்பார்.




விஜய் உடன் ’திருமலை’ படத்தில், அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருப்பார். விஜய் உடன் ஒரு வேலை நேர்காணலுக்காக, பைக்கில் செல்லும் விவேக் தெரு தெருவாக ‘டேக் டைவர்சன், டேக் டைவர்சன்...’ பலகைகளை பார்த்து டயலாக் அடித்திருப்பார். ஆங்காங்கே, சாலைகளில் தடுப்புப் போடப்பட்டிருப்பதை கிண்டல் அடித்திருப்பது, அரசு தன் பணிகள் காட்டும் சுணக்கம் மற்றும் திட்டமிடப்படாத பணிகள் போன்றவைகளை குறித்து பேசியிருப்பார். போலவே, சுந்தர்சி படத்தில் விவேக் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை விமர்சனம் செய்திருப்பார். அதில் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருப்பார். அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்லவும் வழியில்லை. வெகு தூரத்தில் இருக்கிறது ஆஸ்பத்திரி. அப்படியிருக்க, அங்கு வரும் ஆட்டோவில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றி, பிரசவம் நடப்பது போல சீன் அமைந்திருக்கும். ’ பிரசவத்திற்கு ஆட்டோ இலவசம்’ என்பதை நான் சரியா புரிந்து கொண்டேன் என்றும், சாலைகள் சீரமைக்கப்படாமலும், பழுதடைந்திருப்பதவையும் நகைச்சுவை கலந்து பஞ்ச் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.





வாழ்வில் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதற்கு,


"டோண்ட் வொர்ரீ... பி ஹேப்பீ..."


"கவர்மெண்டு மரம் வள மரம் வளங்குது.. அதையெல்லாம் விட்டுடு இந்த புதர்கள வளக்குறீகளேய்யா!"


மின்னலே படத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் வராதது குறித்து இப்படி சொல்லியிருபார்.


’ரொம்ப பசிக்குது.’


”பைப் தண்ணியாவது குடிப்போம்!”


என்னடா இது உஷா ஃபேன்ல வரமாதிரி இவ்வளவு காத்து வருது. ஒருவேளை உஷா ஃபேன் கம்பேனிக்கும், மெட்ரோ வாட்டருக்கும் ஏதோ பிசினஸ் Collaboration ஸ்டார்ட் பண்டாங்களா? இதுல ஒரு ட்யூப சொறுகிவிட்டா, சைக்கிளுக்கு காத்து அடிச்சி புழைக்கலாம். “


இப்படி, தன் நகைச்சுவையால் மக்களை சிந்திக்க வைத்த மகாகலைஞனின் நினைவு நாள் இன்று. விவேக், என்றும் அவரின் வசனங்களால் வாழ்வார். வி மிஸ் யூ, விவேக் சார்.