மலையாள படங்கள் என்றாலே தவறாக பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் போய், இன்று மலையாள சினிமாக்கள் பிற மொழி படங்களுக்கு முன்மாதிரியாக மாறிவிட்டன. பெரிய பட்ஜெட்டில் படங்களை தமிழ் சினிமா எடுத்துவந்தாலும், இயற்கை அழகியலுடன் வித்தியாசமான கதைகளை கொண்டு கேரள மக்களின் வாழ்வியலை பேசும் மலையாள படங்களே அண்மை காலங்களில் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றன.
ஆனால், 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மலையாள சினிமாவின் நிலை இப்படி இருக்கவில்லை, அப்போது சினிமாவுக்குள் புதிதாக நுழைவதே சிக்கலான ஒன்றாக இருந்தது. சூப்பர் ஸ்டார்களை மட்டுமே நம்பி இருந்த மலையாள சினிமாவில் புதிய கதைகள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது. இந்த சூழலில் தான் 2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவுக்குள் தனது 19 வயதில் அடியெடுத்து வைத்தார் பிரித்விராஜ் சுகுமாறன்.
ரஞ்சித் இயக்கிய நந்தனம் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து அவரது படங்கள் ஹிட் ஆக சிறுவயதிலேயே பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் அங்கீகாரம் புதிய கதைகளை தேர்வு செய்து நடிக்க விடாமல் தடுத்தது. அவரது ஆரம்ப காலங்களில் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கவில்லை. போகப்போக அவரது படங்களும் உரிய வரவேற்பை பெறாமல் போயின. இந்த சூழலில் தான், தனது நிலைபாட்டிலிருந்து விலகி புதிய கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் பிரித்விராஜ். பொறியியல் மாணவனாக அவர் நடித்த புதிய முகம் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பிரித்வி ராஜ், புதுவிதமான கதைகள், இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கத் தொடங்கினார். 2017 ஆம் தனியாக பிரித்விராஜ் ப்ரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி எஸ்ரா, ஆதம் ஜோன், டியான், ரணம், நைன் என அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை தயாரித்து நடித்தார். அவர் கடந்த சில ஆண்டுகளில் நடித்த மெமரீஸ், அய்யப்பனும் கோஷும், 7த் டே, டிரைவிங் லைசன்ஸ் போன்ற பெரும்பாலான படங்கள் மலையாள சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுத்தன. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி கண்டன.
சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தயாரிப்பாளராக உருவெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த பிரித்விராஜ், லூசிபர் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். மோகன்லால் நடித்த அந்த அரசியல் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. மலையாள திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாகவும், மோகன்லாலின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும் பேசப்பட்டது லூசிபர். இதை தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ப்ரோ டேடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ். லூசிபரின் வெற்றியால் ப்ரோ டேடி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிரி இருக்கிறது.
ப்ரோ டேடிக்கு பிறகு லூசிபர் படத்தின் அடுத்த பாகமான எம்புரான் படமும் 2022 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல், அந்தாதூன் படத்தின் மலையாளம் ரீமேக்கான ப்ராமம், கடுவா, பரோஜ், ஜன கன மன, தீர்ப்பு, விலயத் புதா, கோல்டு மேக்னம் ஓபுஸ், ஆடுஜீவிதம் என பல படங்களை கைவசம் வைத்து உள்ளார் பிரித்விராஜ். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு மலையாள சினிமா உலக தரத்துக்கு உயர்ந்து போற்றப்படுகிறது என்றால், அதற்கு இந்த தலைமுறை நடிகர்களில் பிரித்விராஜின் பங்களிப்பு மிக முக்கிய காரணம்.
இந்த பயணம் பிரித்திவிராஜோடு மட்டுமே நின்றுவிடவில்லை. மலையாள சினிமாவின் அடுத்த மீட்பரை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...