நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இன்று நள்ளிரவு 12.01க்கு அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
திரையுலகில் மீண்டும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முழு வீச்சில் பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அரண்மனை 3, அண்ணாத்த, எஃப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி, குலு குலு, லால் சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1, சர்தார், கேப்டன், டைரி என ரிலீசான, ரிலீசாக போகப் படங்களின் விநியோக உரிமையை இந்நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் மற்ற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டாலும் இவர்கள் ஏதாவது அப்டேட் வெளியிட போகிறார்கள் என்றால் கண்டிப்பாக ஏதோ ஒரு படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றி இருக்கலாம் என கணிக்கப்படும் அளவிற்கு நிலைமை உள்ளது.
இதனிடையே இன்று நள்ளிரவு 12.01க்கு அப்டேட் ஒன்றை வெளியிடவுள்ளதாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது இந்தியன் -2 படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து பெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் 2019 ஆம் ஆண்டு முதல் உருவாகி வந்தது.
அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் நடிகர் விவேக் மரணத்தால் அவருக்கு பதிலாக நடிகர் கார்த்திக் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லைகா நிறுவனம் - ஷங்கர் இடையேயான மோதல் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் ஷங்கரின் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்தியதன் மூலம் இருவரும் மீண்டும் இப்படத்தில் பணியாற்ற உள்ளது உறுதியானது. இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடப்போகும் அந்த அப்டேட் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் நடித்த விக்ரம் படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்ற நிலையில் இந்தியன் 2 பிரச்சனைக்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.