Varisu vs Thunivu: துணிவை விட வாரிசு படத்தின் வசூல் அதிகமா? - ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்..!
துணிவு மற்றும் வாரிசு படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட போஸ்டரால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
துணிவு மற்றும் வாரிசு படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட போஸ்டரால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதேபோல் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, ஜான் கொக்கைன், ஜிபி முத்து, பாவ்னி, அமீர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இடம் பெற்றுள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான இந்த இரு படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
𝗧𝗛𝗘𝗬’𝗥𝗘 𝗧𝗥𝗨𝗟𝗬 𝗧𝗛𝗘 𝗣𝗢𝗡𝗚𝗔𝗟 𝗕𝗟𝗢𝗖𝗞𝗕𝗨𝗦𝗧𝗘𝗥𝗦! 🎉🔥
— Red Giant Movies (@RedGiantMovies_) January 14, 2023
Catch #BlockbusterThunivu & #BlockbusterVarisu at cinemas near you now!#HappyPongal 🥁🎊 pic.twitter.com/PHpytXC1iV
இதனிடையே துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையையும், வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு, ஆற்காடு, கோவை ஆகிய மாவட்டங்களின் தியேட்டர் வெளியீட்டு உரிமையையும் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை வசூலில் துணிவு படம் முதலிடமும், உலகளவில் விஜய்யின் வாரிசு படம் முதலிடம் பெற்றதாக கூறப்பட்டது.
அதேசமயம் நேற்று முன்தினம் வாரிசு படத்தின் மற்ற மாவட்டங்களின் தியேட்டர் விநியோகஸ்தரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வாரிசு படம் “பொங்கல் வின்னர்” என போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதற்கு போட்டியாக துணிவு படம் தான் “ரியல் பொங்கல் வின்னர்” என்ற கேப்ஷனுடன் போஸ்டர் ஒன்றை போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வாரிசு, துணிவு படங்கள் பிளாக்பஸ்டர் என்று இரு போஸ்டர்களை வெளியிட்டது. இதில் 4 மாவட்டம் மட்டுமே தியேட்டர் வெளியீட்டு உரிமையை பெற்ற வாரிசு பட போஸ்டர் முதல் இடத்திலும், மொத்த தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையையும் பெற்ற துணிவு படம் 2வது இடமும் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்ப வாரிசு படம் தான் வசூலில் முதலிடமா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.