தெலுங்கில் மாஸ் காட்டும் குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. வாத்தி படத்தைத் தொடர்ந்து இரண்டு முறையாக தனுஷ் தெலுங்கு இயக்குநரோடு பணியாற்றியுள்ளார். தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் ரூ 100 கோடி வசூலித்தது. இப்படம் தமிழ்நாட்டில் ரூ 35.20 கோடியும் ஆந்திரா மற்றும் தெலங்கான மாநிலங்களில் ரூ 41.25 கோடியும் வசூலித்தது. தற்போது குபேரா திரைப்படமும் தமிழைக் காட்டிலும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
குபேரா வசூல்
குபேரா திரைப்படம் தெலுங்கில் இதுவரை ரூ 38.81 கோடியும் தமிழில் ரூ 15.25 கோடியும் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குபேரா திரைப்படம் இதுவரை 80 கோடிவரை வசூலித்துள்ளது. தெலுங்கில் குபேரா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தமிழ் நாட்டில் முதல் வாரத்திலேயே படத்தின் வசூல் சரிவை நோக்கி சென்று வருகிறது
தமிழ் ரசிகர்களுக்கு குபேரா வர்க் அவுட் ஆகாதது ஏன் ?
குபேரா படம் தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் வர்க் அவுட் ஆகாதது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் . ஆனால் இந்த முறை குபேரா படம் அவர்களிடையே பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதற்கு ஒரு சில காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் முக்கியமான காரணமாக படத்தின் நீளம் கூறப்படுகிறது. குபேரா படத்தின் முழு நீளம் 3 மணி நேரம். இதற்கு முன்னதாக கார்த்தியின் மெய்யழகன் படத்தின் நீளமும் ஒரு பெரும் நெகட்டிவாக கூறப்பட்டது. இரண்டறை மணி நேரத்திற்கு கூடுதலாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் சமீபத்தில் வெளியான எந்த பெரிய பட்ஜெட் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருபதிபடுத்தவில்லை . கமலின் தக் லைஃப் , சூர்யாவின் ரெட்ரோ என இந்த வரிசை நீண்டு கொண்டே போகும். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி , சூரியின் மாமன் , லப்பர் பந்து போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போதைய நிலைப்படி தமிழ் ரசிகர்கள் ஸ்டார்களின் படங்களைக் காட்டிலும் நல்ல கதையம்சம் கொண்ட சின்ன நடிகர்களின் படங்களையே அதிகம் ஆதரிக்கிறார்கள்.