லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி செய்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டதின் கீழ் பாலாஜி என்ற தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம் எனக்கூறி போலி ஆவணங்களை காட்டி அதற்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.15.83 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறி ரவீந்தர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அதன் காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனர். அதன்பின் அவரின் ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் இருந்து வெளியில் வந்துள்ள ரவீந்தர் சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாலாஜியின் புகார்:
லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரில் படங்களைத் தயாரித்து வரும் ரவீந்தர் தற்போது நான்கு படங்களை தயாரித்து வருவதாகவும், அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளப் பணம் கொடுப்பதற்காக தான் தன்னிடம் இருந்து சுமார் 16 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, அதை அவர் திருப்பித் தரவில்லை என பாலாஜி தன்னுடைய புகாரில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பாலாஜி கப்பா என்பவர் நடிகர் சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' படத்தைத் தயாரித்தவர். புகாரில் “பாலாஜி கப்பா கூறியிருப்பது போல அவரிடம் இருந்து நான் பெற்ற பணத்தை நடிகர்களுக்கு சம்பளமாக தான் கொடுத்தேன் என்றால், அதற்கான சான்று அவரிடம் ஏதாவது உள்ளதா என காட்ட சொல்லுங்க, நானும் என்னுடைய தரப்பு சான்றை காட்டுகிறேன்" எனப் பேசியுள்ளார் ரவீந்தர்.
ராஜ்கிரண் மீது குற்றச்சாட்டு:
மேலும் ரவீந்தர் பேசுகையில் "நான் பண நெருக்கடியில் இருப்பது உண்மைதான். ஒரு படத்தில் நடிப்பதற்காக நான் நடிகர் ராஜ்கிரணுக்கு அட்வான்ஸ் பணமாக ரூ. 50 லட்சம் கொடுத்து இருந்தேன். ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட அவர் எனக்கு உதவி செய்யவில்லை. அவர் என்னுடைய அம்மாவின் போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
அந்த மெசேஜில் "உங்களுடைய நிலைமை எனக்கு புரிகிறது. ஆனால் தற்போது என்னால் ஒரு லட்சம் ரூபாய் கூட திருப்பி கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறேன். வரும் ஜூன் மாதம் எனக்கு கொடுத்த 50 லட்ச ரூபாயையும் நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என நடிகர் ராஜ்கிரண் மெசேஜ் அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் ரவீந்தர்.
ஒரு நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதால் ஏராளமான சட்ட சிக்கல்கள் உள்ளன. அது ஒரு தயாரிப்பாளராக எனக்கு புரிகிறது. ஆனால் இந்த இக்கட்டான சூழலில் ஏராளமான பிரச்சினைகள் இருந்தன. அப்போது கூட அவர் எனக்கு பணம் கொடுத்து உதவவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது" என ரவீந்தர் பேசியுள்ளார்.