தனது மகன் ரவி கிருஷ்ணாவின் சினிமா வாழ்க்கையில் தான் சரியாக கவனம் செலுத்தவில்லை என தயாரிப்பாளர் ஏ.ம. ரத்னம் தெரிவித்துள்ளார். தனது சொந்த வேலைகளில் பிஸியாக இருந்ததால், மகனின் சினிமா கேரியரை திட்டமிட்டு உருவாக்கி அவருக்கு போதிய ஆதரவு அளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக அறியப்படுபவர் ஏ.ம. ரத்னம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ள இவர், தனது மகன் ரவி கிருஷ்ணாவையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
ரவி கிருஷ்ணா 2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரவி கிருஷ்ணாவின் நடிப்பும் கவனம் பெற்றது.
இதையடுத்து ‘சுக்ரன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கேடி’, ‘நெற்று இன்று நாளை’, ‘காதல்னா சும்மா இல்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், அறிமுகமான ‘7ஜி ரெயின்போ காலனி’ அளவுக்கு அடுத்தடுத்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை. இதனால் தொடர்ந்து முன்னணி கதாநாயகனாக பயணிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.
வருத்தம் தெரிவித்த ஏ எம் ரத்னம்
இந்த நிலையில், தனது மகனின் சினிமா பயணம் குறித்து ஏ.ம. ரத்னம் பேசியுள்ளார். “உண்மையில், நான் செய்த தவறு என்னவென்றால், என்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் அவரை சரியாக ஆதரிக்கவில்லை. அவருடைய கேரியருக்காக எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவருக்கு வெளியில் இருந்து சுமார் 20 முதல் 30 படங்களுக்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால், பல படங்களின் கதைகள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவற்றை அவர் செய்யவில்லை” என்றும் ரத்னம் கூறியுள்ளார்.
அந்த வாய்ப்புகளில் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படமும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், அந்தப் படத்தின் இயக்குநர் பின்னர் தேசிய விருது பெற்றதாக தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. சரணும் தனது குடும்பமும் நண்பர்களாக இருந்ததால் அந்தப் படம் உருவானதாகவும், அதில் ரவி கிருஷ்ணா மிகவும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அங்கீகாரம் பெற்றதாகவும் ஏ.ம. ரத்னம் தெரிவித்துள்ளார்.
தனது மகனை ஒரு முன்னணி நடிகராக உருவாக்குவதற்கான தொழில்முறை திட்டத்தை உருவாக்கி, அவரது அடுத்தடுத்த படங்களை சரியாகத் தேர்வு செய்வதில் தான் தவறிவிட்டதாகவும் ஏ.ம. ரத்னம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
