தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’ரத்தம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
ரத்தம்
‘தமிழ்ப்படம்’ மற்றும் ‘தமிழ் படம் 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அமுதன் அடுத்ததாக விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன்.
கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் தோன்றியிருந்தனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘தெருக்குரல்’ அறிவு இப்பாடலை பாடியுள்ளார்.
’ஒரு நாள்’ பாடல்
ஒரு நாள்....
தெருவில் இறங்கி நான் நடந்தேன்..
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்
இரு கைகள், இரு கால்கள், ஒரு பரஸ்பர புன்னகையோடு
உரையாடிட வந்தான் என்னோடு,
முதன்முதலாய் உன் பேரென்ன??
பிறகாய் உன் ஊரென்ன?
நீ யார்? யார்? எனக் கேட்டார்.
நான் சொல்லி முடித்திடும் முன்பே..
அவன் நட்பை முறித்தானே அங்கே..
நான் சொன்ன விவரத்தைக் கேட்ட நொடி
அவன் என்னை வெறுத்தானே அன்றே!
நான் என்ன சொன்னேன்?
நான் யாருன்னு சொன்னேன்?
வேறென்ன சொன்னேன்?
என் உண்மைய சொன்னேன்?
எது நம்மை வேறாக்கி வைத்தது?
பிரிவிங்கு யாரோ விதைத்தது.
பிடிக்கல...
என்னை ஏன் உனக்குப் பிடிக்கல...
வெறுக்கிற.. அந்த காரணத்தை சொல்லி தொலையேன்.
தாயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு...
உன் ஆணவத்தை தூக்கிப் போட்டு சுற்றிப் பாரு..
இரத்த ஆறு... உற்று பாரு...
என் கதையை நான் சொல்ல வந்தேன்..
இரு கண்ணில் கனவோடு வந்தேன்.
தட்டு தடுமாறி,, நான் மேலே வந்தேன் ஏறி..
நான்பட்ட அனுபவம் இப்போ சொல்லப் போறேன் ஸ்டோரி..
ஒரு நாள்..
என் தெருவில் இறங்கி நடந்தேன்
அங்கு ஒரு மனிதன்..
நெருங்கி வந்தார்.
உறக்க சொன்னான்.
நீ மனுசனேயில்லை..
இப்படியான சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி பாடல் வரிகள் அமைந்துள்ளன.
ஒரு நாள் பாடலைக் கேட்க..
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உருவாகி வரும் ரத்தம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 6 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த போஸ்டரில் ‘சாத்தியமில்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சிறது நம்ப முடியாத ஒன்னா இருந்தாலும் அதான் உண்மை “ என்கிற வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள்
விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' படத்தின் அப்டேட் சமீபத்தில் தான் வெளிவந்தது. நடிகை மிருணாளினி ரவி இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். பரத் தனசேகரன் படத்திற்கு இசையமைக்க இளவரசு, வி.டி.வி கனேஷ் , தலைவாசன் விஜய் உள்ளிட்டவர்கள் படத்தில் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.