இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட படம் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் தெலுங்கு படங்கள் மூலமாக பிரபலமாகி தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வருகிறார்.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்:
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை இவர் காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது? என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
திருமணம் எப்போது?
ஆனாலும், நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் கீத கோவிந்தம் என்ற படத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடித்தனர். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின்போது இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவாகியது. பின்னர், இது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அடுத்தாண்டு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசியாக உள்ள ராஷ்மிகா:
இவர்கள் இருவரும் இணைந்து கீத கோவிந்தம், டியர் காம்ரேட், கிங்டம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர், ஃபேமிலி ஸ்டார், கிங்டம் ஆகிய படங்கள் பெரியளவு வெற்றி பெறவில்லை. தொடர் தோல்வி படங்களாக இருப்பதால் அடுத்த படத்தை வெற்றிப்படமாக கொடுக்க விஜய் தேவரகொண்டா கதைத் தேர்வில் மிகுந்த கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், புஷ்பா படம் மூலமாக இந்தியிலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தால் மேலும் புகழடைந்தார். விக்கி கெளசலுடன் இணைந்து சாவா, சல்மான் கானுடன் இணைந்து சிக்கந்தர் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் தம்மா, காக்டெயில் 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் தி கேர்ள்ஃப்ரண்ட், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா தனது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் ஆந்திராவில் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு பிரபலங்களின் முன்னிலையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான், குபேரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.