தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு ஹீரோயினாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற ராஷ்மிகா தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்றார்.


தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய ராஷ்மிகா அனைவராலும் தென்னிந்திய சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கப்படுகிறார்.


 



அனிமல் படத்தின் வெற்றி விழா :


தென்னிந்திய சினிமாவில் புயலை வீசிய ராஷ்மிகா, பாலிவுட் பக்கம் தற்போது நுழைந்துள்ளார். 'குட்பை' படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் மகளாக இந்தி திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகமாக மாறினார்.


அதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது அனிமல் திரைப்படம். எனவே அதைக் கொண்டாடும் விதமாக 'அனிமல்' படத்தின் வெற்றி விழா கடந்த சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. ஏராளமான திரைப் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 


ராஷ்மிகா மீது குற்றச்சாட்டு :


அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'புஷ்பா : தி ரைஸ்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புஷ்பா : தி ரூல் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே நடிகை ராஷ்மிகா வெளியேறியதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறார்கள் ராஷ்மிகா தரப்பினர். "புஷ்பா 2"  இயக்குநரிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகே அனிமல் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஷ்மிகா கிளம்பினார். அதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார் என சொல்லப்படும் இந்த தகவல் உண்மையல்ல என தெரிவித்துள்ளனர் ராஷ்மிகா தரப்பினர்.   


 



ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா நிச்சயம் : 


அதே சமயம் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த மற்றுமொரு வதந்தியும் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பல மாதங்களாக ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் செய்து வந்ததாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும், வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில்  நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் வதந்திகள் காட்டுத்தீ போல இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும்  சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து எதுவும் வெளியாகவில்லை.