நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ராஷ்மிகாவிடம் இருந்து சுமர் 80 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகவும், இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அண்மையில் தகவல் ஒன்று வெளியானது. இந்நிலையில் ராஷ்மிகா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தங்களுக்குள் எந்த வித விரோதமும் இல்லை. இருவரும் தொழில் ரீதியாக சுமுகமாக பிரியும் முடிவை சேர்ந்தே எடுத்தோம். எங்களது பிரிவு குறித்து துளியும் உண்மையில்லை”இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்நிலையில் ராஷ்மிகாவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த பெஞ்ச் மார்க் நிறுவனமும் ராஷ்மிகாவும் அவரது மேனேஜரும் சுமுகமாக பிரிந்ததாகவும் பண விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 






நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் நடிகர் விஜய் உடன் இவர் நடித்திருந்த வாரிசு திரைப்படம் வெளியாக நல்ல வசூலைப் பெற்றது.  இந்நிலையில் இவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா அளவில் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் நாள் திரைக்கு வர உள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்கான படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.


அதில் தெரிவித்துள்ளதாவது “அனிமல்’ பட ஷூட்டிங் முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பவிட்டேன். ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன். ‘அனிமல்’ படத்தில் நடித்தது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு பெரிய வெற்றிடத்தை உணர ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் படக்குழுவுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. செட்டில் வேலை செய்த ஒவ்வொருவரும் தேர்ந்த கலைஞர்கள். நல்ல மனிதர்கள். இன்னும் 1000 முறை அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், அப்படி வேலை செய்யும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். ரன்பீர் கபூருடன் பணியாற்றப்போகிறேன் என நினைத்த போது பதற்றமாக இருந்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். இந்த படப்பிடிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய படக்குழுவுக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.