ராஷ்மிகா மந்தனா
தென் இந்திய சினிமாவைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார் ராஷ்மிகா. தற்போது விக்கி கெளஷல் நடித்துள்ள சாவா என்கிற வரலாற்று படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. சிவாஜி சாவந்த் எழுதிய மராத்திய நாவலை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் நடிகை ராஷ்மிகா மந்தனா உடைந்த காலுடன் கலந்துகொண்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
உடைந்த காலுடன் நிகழ்வுக்கு வந்த ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது அவரது கால் உடைந்தது. சாவா படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார். அப்போது வீட் சேரில் இருந்து எழுந்து ஒற்றை காலில் குதித்தபடி நடந்து சென்றார். இதனைப் பார்த்த படத்தின் நாயகன் விக்கி கெளஷல் அவர் கை பிடித்து அழைத்துச் சென்றார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
ஆரோக்கியமாக இருந்தும் தனது நடிகைகள் தங்களது சொந்த படங்களின் ப்ரோமோஷன்களுக்கு வராத நிலையில் காலில் அடிபட்டும் ராஷ்மிகா மந்தனா நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.