மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே புகழ்பெற்ற ராப் பாடகர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடிக்கொண்டிருக்கும்போது மூச்சுத்திணறல்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ராப் பாடகர் பிக் போக்கி. இவர் நேற்று முன் தினம் (ஜூன்.17) இரவு அமெரிக்காவின் பியூமண்ட் நகரில் உள்ள ஒரு பார் ஒன்றில் நிகழ்ச்சியின் கலந்துகொண்டுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராப் பாடிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சில வினாடிகளில் அவர் சரிந்து கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக அங்கு அவசர உதவிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடகர் பிக் போக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 48. பிக் போக்கியின் மரணத்துகான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில் ஹூஸ்டனைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிக் போக்கி உண்மையான பெயர் மில்டன் பவல் ஆகும். தொடக்க காலத்தில் உள்ளூர் இசைக்குழுவில் பாடி வந்த பிக் போக்கி அந்நகரில் தொடர்ந்து பிரபலமானார்.
தனது 1999ஆம் ஆண்டு வெளியான “தி ஹார்டெஸ்ட் பிட் இன் தி லிட்டர்" ( Hardest Pit in the Litter!) எனும் ஆல்பத்தால் பிக் போக்கி பிரபலமானார். இறுதியாக 2021ஆம் ஆண்டு "சென்செய்" (Sensei) எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தொடங்கி அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் பிக் போக்கிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாடகர் கே.கே
இதேபோல் இந்தியாவின் பிரபல பாடகர் கே கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மூச்சுத்திணறி, பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி கொல்கத்தாவில் கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் கே.கே பங்கேற்ற சென்றபோது மேடையில் பாடிக் கொண்டிருக்கையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக தான் தங்கியிருந்த அறைக்கு அவர் திரும்பிய நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில், ஆனால் மாரடைப்பு காரணமாக கே.கே. உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கே.கே.பிரபல இந்தியப் பாடகராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.