தனது பிறந்த நாளை தீபிகா படுகோனுடன் கொண்டாடிய புகைப்படத்தை பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் கடந்த 6ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், ரன்வீர் சிங்கின் மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் ரன்வீர் சிங்கிற்கு தீபிகா படுகோன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என சிலர் கருத்து பகிர்ந்து வந்தனர்.
இந்த சூழலில், தனது பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாடிய புகைப்படத்தை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கப்பலில் செல்லும் இருவரும், விண்டோ வழியாக இயற்கையை ரசித்தபடி உள்ளனர். தனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்ட ரன்வீர் சிங், இயற்கையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து பண்ட் பாஜா பாரத் திரைப்படம் மூலம் அறிமுகமாக ரன்வீர் சிங், தனக்கான தனி அடையாளத்தை பதிவு செய்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த தீபிகா படுகோனை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங், 2018ம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். இருவரும் இணைந்து, பாஜ்ராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினர். தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ”ராக்கி அவுர் ராணி கி ப்ரேன் கஹானி” படத்தில் ரன்வீர் சிங்குடன், ஆலியா பட் நடித்து வருகிறார்.
மும்பையை பூர்வீகமாக கொண்ட ரன்வீர் கபூருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. அமெரிக்காவில் பட்டம் படித்த அவர், இந்தியா திரும்பியதும், சினிமாவில் ஒளிப்பதிவாளரான தனது பணியை தொங்கியுள்ளார். சுமார் 135 ஆடிஷன்களுக்கு சென்று தோல்வியை தழுவிய அவருக்கு முதன் முதலில் அனுஷ்கா சர்மாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திய ரன்வீர் சிங், தற்போது பாலிவுட் வட்டாரத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.