ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் சீதையாக இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படமாகும் ராமாயணம்
அமீர் கான் நடித்த தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தற்போது இந்திய புராணக் கதையான ராமாயணத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அனிமல் பட நடிகர் ரன்பீர் சிங் ராமனாக நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் பட புகழ் யாஷ் ராவணனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை வரும் ஏப்ரம் ஏப்ரல் 17ஆம் தேதி ராம் நவமிக்கு படக்குழு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து இணைய இருக்கிறார்கள். இப்படம் குறித்து இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். இதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் ஜூலை வரை எடுக்கப்பட இருப்பதாகவும் அடுத்த ஆண்டும் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் கிளறும்படி மற்றொரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவர் சேர்ந்து இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாலிவுட்டில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், கிளாடியேட்டர் , இன்செப்ஷன், பேட்மேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் ஹான்ஸ் ஜிம்மர். முன்னதாக ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்ற தான் ஆசைப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது அவரது ஆசை நிறைவேறும் விதமாக இரு ஜாம்பவான்களும் சேர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.