இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால் நடிப்பில் வெளியானத் திரைப்படம் இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


 ராட்சசன்


 தமிழில் வெளியான சைக்காலஜிக்கல் கிரைம் த்ரில்லர்களில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த ஒரு படமாக ராட்சசன் திரைப்படம் இருக்கிறது. விறுவிறுப்பாக அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று பார்வையாளர்களை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் திரைக்கதை முதலிய காரணங்களால் ராட்சசன் திரைப்படத்தை பாராட்ட வைக்கிறது என்றாலும் முக்கியமான சிக்கல் ஒன்று இந்தப் படத்தில் பேசப்படாமல் இருக்கிறது.


 


சைகோபாத்களின் ஃப்ளாஷ்பேக்


கூகுளில் சைக்கோபாத் என்று தேடிப் பார்த்தால் ”பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய  உளவியல் ரீதியான பாதிப்பிற்குள்ளாகி மனம் பிறழ்ந்தவர்கள்” என விளக்குகிறது. இது மிக பொதுப்படையான ஒரு விளக்கம் மட்டுமே. ஆனால் இன்று உளவியல் மருத்துவத் துறையில் பல்வேறு புதிய வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு சைக்கோ கிரிமினல் உருவாவதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.


சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள்


ஒருவகையில் இந்தக் கொலைகாரர்கள் எல்லாம் இந்த சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தங்களது பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனித்துவிடப் பட்டவர்கள். இந்தக் காரணங்களால் மனம் பிறழ்ந்து சமூக விரோதபோக்கைத் தேர்வு செய்பவர்கள். இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி, இந்தக் குற்றவாளிகளின் ஃப்ளாஷ்பேக்கை காட்டும் திரைப்படங்கள், அந்தக் கதைகளை, படத்தை நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே கையாள்கின்றனவா, அல்லது  இந்தக் குற்றவாளிகளை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றதா?


ராட்சசன் க்ளைமேக்ஸ்


தனது சிறு வயதில் இருந்தே ஒரு வார்த்தையால் அனைவரும் அவனை துன்புறுத்தியிருக்கிறார்கள். அவன் ஒரு கொலைகாரனாவதற்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கடைசியில் அவனை ஜெயிப்பதற்காக அவனை பலவீனமாக்குவதற்காக கதாநாயகன் பயன்படுத்துவதும் அதே வார்த்தையைத்தான். அதாவது அவன் எந்த வார்த்தையால் சமூக விரோதி ஆகினானோ அதே வார்த்தையால் அவனை வெல்ல நினைப்பது சரியாகுமா?


என்ன தேவை ?


சமீபத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடித்து இந்தியில் தஹாத் என்கிற ஒரு இணையத் தொடர் வெளியானது. இந்த தொடரில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றி கொலை செய்கிறான் கொலைகாரன். இந்த கதாபாத்திரம் குறித்து இந்த தொடரின் திரைக்கதை எழுத்தார்ளர்கள் பேசுகையில் அவர்களது நோக்கம் என்னவாக இருந்தது என்பதை விளக்குகிறார்கள். அதாவது ஒரு சைக்கோ கொலைகாரன் உருவாகிறான் என்றால் அதற்கு பின்னால் பல்வேறு சமூக காரணிகள் மற்றும் தனிப்பட்ட ரீதியான உளவியல் காரணங்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த காரணங்களை நாங்கள் நேர்மையாக காட்ட நினைத்தோம்.


ஆனால் இந்த காரணங்களை அவனது செயல்களை நியாயப்படுத்த இல்லாமல் அவன் எந்த மாதிரியான ஒரு நபர் என்பதை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. ராட்ச்ச்சசன் திரைப்படத்தில் குற்றவாளியின் பின்னணி  சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பின்னணி அவனது செய்ல்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட வில்லை என்பது நல்ல அம்சமாக இருந்தாலும் குற்றவாளியாக மாறியப் பின் அந்த பின்னணியை அவனுக்கே எதிராக பயன்படுத்தக் கூடிய சுதந்திரத்தை தாமாக எடுத்துக்கொள்வதே அறமற்ற ஒரு செயல்.