Ramayana Trailer: இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம் வரும் நவமபர் 8ம் தேதி வெளியாக உள்ளது.
ராமாயணா திரைப்படத்தின் ட்ரெய்லர்:
இந்திய வரலாற்றின் மிக முக்கியமான புனைவுக்கதைகளில் ஒன்றாக கருதப்படும் ராமரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமாயணா திரைப்படம் உருவாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் புகர் யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் நவமபர் 8ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ராமாயணா ட்ரெய்லர் எப்படி இருக்கு?
ராவணனாக யஷ் கம்பீரமாகவும் மிரட்டலான தோற்றத்துடன் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு சில காட்சிகளே இடம்பெற்று இருந்தாலும், சீதை கதாபாத்திரத்தை சாய் பல்லவி ஓரளவிற்கு ஈடுகட்டுவதாகவே தெரிகிறது. ஆனால், படத்தின் நாயகனான ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரை பார்க்கும்போது, அந்த தெய்வீக உணர்ச்சி என்பது ஏற்படவில்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதுபோக படத்தின் காட்சியமைப்புகளை பார்க்கும்போது சீரியல் போன்ற உணர்வை தருகிறது. க்ராஃபிக்ஸ் காட்சிகள் துண்டாக தெரிகிறது. ட்ரெய்லர் என்பதால் சிஜி பணிகள் முழுமையாக முடிக்காமலேயே வெளியிட்டுவிட்டார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை ட்ரெய்லரை போன்றே படத்திலும் க்ராஃபிக்ஸ் காட்சிகள் இருந்தால், ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலைமை தான் ராமாயணாவிற்கும் ஏற்படும் என ரசிகர்கள் எச்சரிக்கின்றனர். சிலர் ராஜமௌலி எடுத்து இருந்தால் இந்த படத்திற்கு இன்னும் மிகப்பெரிய மதிப்பு உருவாகி இருக்கும் எனவும் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.
