தமிழ் சினிமாவில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்த நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ராமராஜன் , எங்க ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் அடுத்தடுத்து கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரானார்.


சாமானியன்


அடுத்தடுத்த 100 நாட்கள் ஓடிய படங்களில் நடித்த ராமராஜன் வாய்ப்பில்லாத காரணத்தினால் பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு சில கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் தனது கம்பேக் கொடுப்பதற்கு கச்சிதமான கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருந்தார். 


இப்படியான நிலையில் அவர் நடித்து வெளியாகியுள்ள படம் சாமானியன். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ராமராஜன் , ராதா ரவி , மைம் கோபி , எம்.எஸ் பாஸ்கர், வெங்கட், கே.எஸ் ரவிகுமார் , அறந்தாங்கி நிஷா , தீபா ஷங்கர் , சரவணன் சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த 23ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகியது.


கிராமத்து கதைகளில் நடித்து எளிய மக்களின் மனதில் இடம்பிடித்த ராமராஜன் சாமானியன் படத்திலும் அப்படியான கதை நாயகனாக நடித்துள்ளார். விவசாயப் பின்னணியைக் கொண்ட எளிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி பெறும் அவலங்களை பேசும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது  சாமானியன் படம் . படத்தில் ஆங்காங்கே சில சறுக்கல்கள் இருந்தாலும் , படத்தின் மெசேஜ் பார்வையாளர்களை சரியாக சென்று சேர்ந்துள்ளது. இப்படியான நிலையில் சாமானியன் படத்தின் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. 


சாமானியன் படத்தின் வசூல் தகவல்கள்




ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் சாமானியன் படத்திற்கு மக்களிடம் குறைவான வரவேற்பே கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி சாமானியன் படம் முதல் நாளில் 3 லட்சம் வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் 3 லட்சமும் மூன்றாவது நாளாக 4 லட்சமும் வசூலித்துள்ளது. 


பிடி சார்




சாமானியன் படத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் மே 24 ஆம் தேதி வெளியான பிடி.சார் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹிப்ஹாப் தமிழா அனிகா, காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார். பிடி சார் படம் முதல் நாளில் ரூ 70 லட்சமும் இரண்டாவது நாளில் 1.13 கோடி வசூலித்துள்ளதாகவும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று மூன்றாவது நாளின் வசூலைச் சேர்த்து இப்படம் 2.39 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.