ரமணா கதை தன்னுடையது என தெரிந்த நிலையில் விஜயகாந்த் செய்த செயல் குறித்து இயக்குநர் நந்தகுமார் தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. 


கடந்த 2002 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ரமணா”. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களின் வரிசையில் உள்ளது. ஊழல் இல்லாத அரசை உருவாக்க முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்த்து பேராசிரியர் ஒருவர் எடுக்கும் முயற்சிகள் என படத்தின் கதை அனைவரையும் கவர்ந்தது. 


இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி, சர்கார் ஆகிய படங்கள் கடுமையான கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. இதில் சர்கார் படத்தின் டைட்டிலில் கதைக்கு உரிமை கொண்டாடியவரின் பெயரை இடம்பெற செய்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் முருகதாஸ். ஆனால் அவரின் ரமணா படமே தன்னுடைய ஆசான் படத்தின் கதை தான் என இயக்குநர் நந்தகுமார் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 






இதுதொடர்பான புகார் அப்போதைய நடிகர் சங்கத்திற்கு சென்ற போது அப்போது சங்கத்திற்கு தலைவர் விஜயகாந்த் என்ற போதிலும் நடிகர் நெப்போலியன் தான் பிரச்சனையை தீர்க்க முயன்றார். இழப்பீடாக பணம் பெற்று தருவதாக கூறினார். ஆனால் நான், படத்தில் கதை என்னுடையது என இடம் பெற வேண்டும் என தெரிவித்தேன். முருகதாஸ் கேட்டிருந்தாலே நான் கதையை கொடுத்திருப்பேன் என நெப்போலியனிடம் சொல்லி விட்டு வந்தேன். 


அதன்பின் ஒருநாள் விஜயகாந்த் எனக்கு போன் செய்து வேறு கதை இருக்கிறதா என கேட்டார். நான் இருக்கிறது என சொல்ல இரவு 9 மணியளவில் வந்து தன்னை சந்தித்து சொல்லுமாறு தெரிவித்தார். நானும் சொன்னபடி சென்றேன். அங்கு அவரின் ஒட்டுமொத்த குழுவினரும் அமர்ந்து கதை கேட்க சுமார் 3 மணி நேரம் தென்னவன் படத்தின் கதையை சொன்னேன். கதை முழுவதையும் கேட்டு விட்டு காலையில் பார்க்கலாம் என சொல்லி விட்டார்கள். மறுநாள் காலையில் எனக்கு போன் வந்தது. அதில் தென்னவன் படத்தின் டைட்டிலை பதிவு செய்ய சொல்லி விட்டதாகவும், அட்வான்ஸ் பணம் பெற்றுக்கொள்ளுமாறும் சொன்னார்கள். அப்படித்தான் அந்த படம் உருவானது என இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ரமணா படம் இன்றளவும் மக்களால் மறக்க முடியாத படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண