அப்பா மகளின் பாசத்தை காட்சிப்படுத்திய எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருந்தாலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், ஒரு உணர்ச்சிப்பூர்மான படத்தைக் கொடுத்து இருந்தார் இயக்குநர் ராம். அது தான் அன்பால் படம் முழுக்க நிறைந்து இருந்த 'பேரன்பு' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


 



தங்க மீன்கள் படம் மூலம் வேறு ஒரு விதமான அப்பா - மகள் பாசத்தைக் காட்டிய ராம், 'பேரன்பு' படம் மூலம் ஒரு முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியையும் அவரை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அப்பாவைச் சுற்றியும் கதையை நகர்த்தியுள்ளார்.


12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் மம்மூட்டி, ஒரு நடுத்தர வயது அப்பாவாகவும், மனைவியின் ஏமாற்றத்தையும் சகித்துக் கொண்டு, அஞ்சலியால் ஏமாற்றப்படும்போது அதை மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கும் ஒரு யதார்த்தமான மனிதராகவும் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் சாதாரண மனிதராக வியக்கத்தக்க ஒரு நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.


 



‘தங்க மீன்கள்’ படத்தில் அப்பாவியாக கலகலவென பேசிக் கொண்டே இருந்த அந்த சிறுமியா இது என வியக்க வைக்கும் அளவுக்கு ஒரு வசனம் கூட இல்லாமல், மிகவும் கனமான, சவாலான கதாபாத்திரமாக வாழ்ந்து இருந்தார் சாதனா.


சில காட்சிகள் வந்து போன அஞ்சலி முதல், திருநங்கைகள் தினசரி சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அஞ்சலி அமீர் முதல் அனைவரும் அவரவரின் பங்களிப்பை வெகு சிறப்பாக செய்து படத்திற்கு கனம் சேர்த்தனர்.


ஆள் நடமாட்டமே இல்லாத அந்த மலைப்பிரதேசத்தில் ஒத்தையில் ஒரு வீடு. அந்த வீடு கொடுக்கும் ஒரு வித்தியாசமான உணர்ச்சியை யுவன் சங்கர் ராஜாவின் இசை மேலும் அழகுபடுத்தி மிக அருகில் கொண்டு சேர்த்தது. மகளுக்காக ஆடிப்பாடும் இடங்களிலும், மகள் பூப்படைந்த விஷயம் அறிந்து வருந்தும் இடத்திலும், மகளுக்கு பருவ வயதில் வரும் பாலியல் உணர்வை கண்டு வாயடைத்து அழும் இடங்களில் எல்லாம் நடிப்பால் நெருட வைத்திருந்தார் மம்மூட்டி.


 



நேரடியாக உணர்ந்தவர்களால் தான் இப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பை உருவாக்க முடியும். ஏனெனில் அவ்வளவு எளிதில் யோசித்துப் பார்க்க முடியாத ஒரு கதைக்களத்தை ராம் மிக சிறப்பாகக் கையாண்டு இருந்தார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இத்தனை கொடூரங்களை சந்திக்க நேரிடுமா என்பதை அத்தனை ஆழமாக சொல்லி, வாழ்க்கையை அணுகும் முறையை மாற்ற முயற்சித்துள்ளார். ஒரு தந்தையாக தாய்மையின் உணர்வை மிகவும் நியாயமாக வெளிப்படுத்த மம்மூட்டி என்ற கலைஞனால் மட்டுமே முடிந்தது. 


மாற்றுத் திறனாளிகளை பெற்றவர்கள் தெய்வங்களாக போற்றப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த பேரன்பு திரைப்படம் காலங்களை கடந்தும் கொண்டாடப்படும்!