நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த நிலையில், படத்தில் சிக்கல் தொடர்வதால், தற்போது அந்நியன் திரைப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து ஹிந்தியில் இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். 2007லேயே தனது சினிமா கேரியரை தொடங்கிய ராம்சரண் தேஜா இப்போது வரை 15 படங்களுக்குள்ளாக வே நடித்திருக்கிறார். 2018ல் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு வெளியான வினய விதேயா ராமா திரைப்படம் செல்ஃப் எடுக்காததால் கம் பேக் தேவைப்படும் நிலையில் இருந்தார் ராம் சரண்.



இந்த நிலையில் தான் மஹதீரா திரைப்படத்திற்கு அடுத்து மீண்டும் ராஜமவுலியுடன் இணைந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.  அடுத்த ஜாக்பாட்டாக அடித்திருக்கிறது சங்கருடனான திரைப்படம்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, கியாரா அத்வானி நடிப்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கும் புதிய  திரைப்படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எஸ்விசி தயாரிப்பு நிறுவனத்தின் 50வது திரைப்படம் என்பதாலும், ராம்சரணின் 15வது படம் என்பதாலும் தற்காலிகமாக எஸ்விசி 50 ஆர்சி 15 என்று இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.





இத்திரைப்படத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மட்டுமல்லாமல் சுனில், அஞ்சலி, நவீன் சந்திரா, ஜெயராம் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். பேட்ட, வனமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடலாசிரியர் விவேக் இத்திரைபப்டத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களோடு வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா, ஹர்ஷித் ரெட்டி, ராமகிருஷ்ணா, மோனிகா நிகோத்ரி, பாடலாசிரியர் ராமஜோகய்யா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், நரசிம்ம ராவ் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டின் முதல் பிற்பகுதியில் அல்லது இரண்டாம் பிற்பகுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

திரைப்படத்தின் அறிமுக விழாவில் ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமவுலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும் சிரஞ்சீவி க்ளாப் அடிக்க, ஷங்கர் ஆக்‌ஷன் சொல்ல, ராம் சரண் நடிக்க படப்பிடிப்புத் தொடங்கி வைக்கப்பட்டது. விழா முடிந்தபின் ஹைதராபாத்தில் உள்ள மிலிட்டரி ஹோட்டலில், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயக்குநர் சங்கர் விருந்தளித்தார். எஸ்விசி 50 திரைப்படத்தின் அறிமுக விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.