ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங்க் வேலைகள் தொடங்கியுள்ளன
கார்த்தி
தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆக்ஷன் நடிகராக அதே நேரத்தில் காமெடி , ரொமான்ஸ், நகைச்சுவை என எல்லா வகைகளில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்து வரும் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி இதுவா இவரது நடிக்கும் முதல் படம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் , நான் மகான் அல்ல , பையா போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு நடிகராக மாறினார். மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று படம் கார்த்தியை முழுவதும் மாஸான ஒரு நடிகராக காட்டியது என்றால் மனிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவன் கதாபாத்திரம் கார்த்தியிக் முழு நடிப்பாற்றலையும் ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடித்து வரும் படம் ஜப்பான்.
ஜப்பான்
குக்கூ, ஜோக்கர் , ஜிப்ஸி உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் படம் ஜப்பான். கார்த்தி, இயக்குநர் விஜய் மில்டன், அனு இமானுவேல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி. வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சில மாதங்கள் முன்பு ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜப்பான் என்கிற கதாபாத்திரத்தில் கார்த்தியின் லுக் ஒரே நேரத்தில் காமெடியாகவும் ஸ்டைலாகவும் இருப்பது ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் கதை எப்படியானதாக இருக்கும் என்கிற ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படத்தின் டப்பிங்க் வேலைகள் தொடங்கி இருக்கின்றன. தனது காட்சிகளுக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார் நடிகர் கார்த்தி. இதனை தெரிவிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கர்மானா என்னானு தெரியுமா
இந்த வீடியோவில் ’கர்மானா என்னானு தெரியுமா’ என்று கார்த்தி பல மாடியூலேஷனில் பேச அது சரியாக இல்லை என்று இயக்குநர் பேசாமல் தீபாவளிக்குப் பிறகு டப்பிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே கடுப்பாகும் கார்த்தி ஜப்பான் படத்தின் கெட் அப்பில் வந்து சரியாக வசனம் பேசுகிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜப்பான் படம் வெளியாக இருக்கிறது.