லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன என்பதை, தயாரிப்பு நிறுவனமாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


விஷ்ணு விஷால் பிறந்தநாள்:


முண்டாசுப்பட்டி, ராட்சசன், இன்று நேற்று நாளை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் விஷ்ணு விஷால். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, லால் சலாம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவு ஒன்ற வெளியிட்டுள்ளது.






லால் சலாம் படத்தின் அப்டேட்:


லைகா வெளியிட்டுள்ள அந்த பதிவில் “எங்களது திருநாவுக்கரசருக்கு லால் சலாம் படத்தின் படக்குழு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் மேலும் நேர்மறை, உடல்நலம் மற்றும் மகிழ்ச்சிகள் கிடைக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, விஷ்ணு விஷால் கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தின் பெயர் திருநாவுக்கரசு என உறுதி செய்யப்பட்டுள்ளது.


லால் சலாம் திரைப்படம்:


 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பின் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ’மொய்தீன் பாய்’ என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


லால் சலாம் படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 8 ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 1 ஆம் தேதி திருவண்ணாமலை சென்ற ரஜினி, அங்கு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதைதொடர்ந்து, அவர் தொடர்பான படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் பூர்த்தியடைந்து விட்டதாக அண்மையில் படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.