சீனியர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலைக்காரன். இந்த படத்தை பிரபல கவிதாலயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க , அமலா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களை தவிர நாசர் , கே.ஆர்.விஜயா, செந்தில், வி.கே .ராமசாமி என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது.


இந்த படம் 100 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்ட திரைப்படம் . ஆனால் இதன் நூறாவது நாள் கொண்டாட்டத்தை வெற்றி விழா கொண்டாட்டம் என்றே படக்குழுவினர் கொண்டாடினர். அந்த மேடையில்  ரஜினிகாந்தின் குருவும் , இயக்குநர் சிகரம் என கொண்டாடப்படும் பாலச்சந்தர் அவர்கள் ரஜினிகாந்த் ஆங்கில படத்தில் நடிப்பதை பத்திரிக்கையாளருக்கு தெரிவித்தார். அதில் “ ரஜினியின் குரு பக்தி என்ன தெரியுமா ? அவர் தற்போது ஆங்கில படத்தில் நடிக்க போகிறார். அதனை முதலில் குருவான என்னிடம் சொல்லிவிட்டுதான் ,மற்றவர்களுக்கு சொல்லுவேன் என்றார். அதனை நானே உங்களுக்கு தெரிவிக்க ஆசைப்படுகிறேன் “ என்றார். அதன் பிறகு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ,  பாலச்சந்தருக்கும் வேலைக்காரன் படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு.தான் நடித்த ராகவேந்திரா திரைப்படம் நஷ்டமானது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.




அதில் “நெருப்பிலாமல் புகையாதுனு சொல்லுவாங்க. நான் ஒப்புக்கொள்கிறேன்.நம்ம சினிமா உலகத்துல பத்திரிக்கை உலகத்துல , நம்ம சமுதாயத்துல நெருப்பில்லாமல் புகையும். வேலைக்காரன் வெற்றியடைந்தது எனக்கு ரொம்ப பெருமை. கவிதாலயா என் தாய்வீடு. ராகவேந்திரா சாமி  படத்தை எடுக்கணும்னு நான் முடிவு செய்த பிறகு இரண்டு மூன்று தயாரிப்பார்கள் படத்தை நான் எடுக்கிறேன் என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது கமர்ஷியல் படம் இல்லை என்றேன். அவர்கள் மாஸ் காட்சிகள் , பாடல் காட்சிகள் என பரிந்துரை செய்தார்கள் . நான் வேண்டாம் என்றேன். அதன் பிறகு பாலச்சந்தர் சார்க்கிட்ட சொன்னேன். அவர் வியாபார ரீதியில் இந்த படத்தை யாரும் எடுக்க முன்வர மாட்டார்கள் என சொல்லி, நடராஜன் சாரை அழைத்து , நடராஜன் அவன் விரும்புறான் . இந்த படத்தை எடு. லாபம் நஷ்டம் பற்றி எனக்கு கவலை இல்லை என சொன்னாரு. படம் உருவானது. ஜி.வி படத்தை விநியோகம் செய்தார்கள். படம் நஷ்டம் எனக்கு தெரியும் .


ஆனால் அந்த படம் எடுத்த பிறகு கவிதாலயா பேனரில் ரிலீஸான படம் சிந்து பைரவி, அதன் பிறகு புன்னகை மன்னன், திருமதி வெகுமதி அதன் பிறகு ரிலீஸான திரைப்படம் வேலைக்காரன். எல்லாம் வெற்றி படங்கள். அந்த படத்தை விநியோகம் பண்ண ஜி.வி பல போட்டிகளுக்கு இடையே சேம்பரில் பிரஸிடண்ட் ஆனாரு. அந்த படத்தில் ராகவேந்திரா சுவாமியா நடிச்ச நான் எப்படி வளர்ந்துக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியும். படத்தை எடுத்த முத்துராமன் எப்படி இருக்கிறாருனு எங்களுக்கு தெரியும். இதெல்லாம் ராகவேந்திரா சாமியுடைய மகிமை “ என உரையை முடித்தார் ரஜினி.