நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், படத்தை பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதை, படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் 171-வது படமாக உருவாகிவரும் ‘கூலி‘

தமிழ் திரையுலகில், மாஸ் இயக்குனர் வரிசையில் இடம்பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக உருவாகிவருகிறது ‘கூலி‘ திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மனம் கவர்ந்த அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாயிர், ஸ்ருதிஹாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. படத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத், பாங்காக் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள பகுதிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஒட்டுமோத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு, 20 செக்கெண்டுகள் ஓடக்கூடிய படத்தின் மேக்கிங் வீடியோவை, ‘Its a Super Wrap‘ என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள ‘கூலி‘ திரைப்படம், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த அப்டேட்டை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.