தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமும், இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உலா வருபவருமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வேட்டையன் vs கங்குவா:
இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வெளியாகும் அதே நாளில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வெளியாக இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவான படங்களிலே மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் கங்குவா.
சூர்யா நடிப்பில் திரையரங்கில் சமீபத்தில் வெளியான எந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் கங்குவா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது.
அதிர்ச்சியில் கங்குவா:
பாபி தியோல், திஷா பதானி உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையனும் அதே தேதியில் வெளியாக இருப்பது தற்போது கங்குவா படக்குழுவினருக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆயுத பூஜை கொண்டாட்டமாக வெளியிட்டால் தொடர் விடுமுறை காரணமாக படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று இரண்டு படக்குழுவினரும் நம்புகின்றனர். ஆனால், 70 வயதானாலும் இன்றளவும் ரஜினிகாந்த் படங்களுக்கு என்று பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது.
ரிலீஸ் தேதி மாற்றப்படுமா?
இதனால், வேட்டையன் படத்தால் கங்குவா படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும், வேட்டையன் வெளியானால் கங்குவா படத்திற்கு கிடைக்கும் திரையரங்குகள் பாதியளவு குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால், திரையரங்க உரிமையாளர்களும் இதனால் கவலை அடைந்துள்ளனர்.
இரண்டு பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாவதால் இரண்டு படங்களும் வெற்றி பெற எந்தளவு வாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவு இரண்டு படங்களும் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை காட்டிலும் கங்குவா படத்தின் படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது என்பதாலும், சூர்யாவை காட்டிலும் ரஜினிகாந்தின் மார்க்கெட் மிகப்பெரியது என்பதாலும் கங்குவா வசூல் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என திரை விமர்சகர்கள் கருதுகின்றனர், இதனால், திட்டமிட்டபடி ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கே இரண்டு படங்களும் வெளியாகுமா? அல்லது இரண்டில் ஒன்று தேதி மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.