இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் கூலி திரைப்பம் வசூலில் புயலாக மாறியிருக்கிறது. லோகேஷின் முந்தைய படமான லியோ படத்தோடு ஒப்பிடுகையில் கூலி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதுவும் ஷங்கர் இயக்கிய 2.0, நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படங்களை கூலி பின்னுக்கு தள்ளியிருக்கிறது.
கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவா 40 வருடங்களுக்கு முன்பு பவர் ஹவுஸில் கூலியாக வேலை பார்த்த போது தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார். அந்த பழைய நண்பரில் ஒருவர் தான் ராஜசேகர் (சத்யராஜ்). அவர் இறந்து விட அவரை கொன்றவர்களை பழிவாங்க செல்லும் தேவா என கதை தொடர்கிறது.
கதை பழையது என்றாலும் மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் லோகேஷ். கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் 1,000 கோடி அடிக்கும் முதல் படம் என்பதே அதிகம் செய்திகளாக வெளியாகின. அந்த வகையில் கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரீ புக்கிங்கில் 50 கோடியை தாண்டியதாக செய்திகள் வெளியானது. லோகேஷ் இயக்கிய லியோ - கூலி ஆகிய 2 படங்களின் சாதனைகளை இங்கு காணலாம்.
லியோவை முந்திய கூலி
லியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ145 கோடி வசூலித்தது. அதே நேரத்தில் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்தது. இரண்டு சாதனைகளுக்கும் சாெந்தக்காரராக லோகேஷ் இருக்கிறார். ரஜினிகாந்த் மீண்டும் வசூல் சக்கரவர்த்தியாக மாறியிருக்கிறார். இந்தியா முழுவதும் கூலி படத்திற்கு 65,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. லியோ படத்திற்கு 4.8 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாளில் 400 கோடி வசூல்
இருப்பினும் 4 நாட்களுக்கு பிறகு விஜய்யின் லியோ ரூ.403.50 கோடி வசூலித்தது. அதே நேரத்தில் கூலி திரைப்படம் ரூ.404 கோடியை வசூலித்தது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் தான் நிரந்தர வெற்றியாளராக மாறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 379 கோடி வசூல் செய்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நான்கு நாட்களில் ரூ. 308 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.595 -615 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023ல் வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது.