தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்திலேயே, பாலிவுட்டிலிருந்தும் ரஜினிகாந்துக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், எல்லா படங்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வகையில், 1993-ஆம் ஆண்டு வெளியாகி இந்தி சினிமாவில் வெற்றிப் பெற்ற 'திரங்கா' திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு ரஜினிகாந்துக்கு கிடைத்தது. கதை அவருக்குப் பிடித்திருந்தபோதும், ஒரு காரணத்திற்காக அந்தப் படத்தை அவர் மறுத்த சம்பவம் இன்று வரை சினிமா ரசிகர்களிடையே பேசப்படுகிறது.
கோபத்திற்கு பெயர் போன நடிகர் ராஜ்குமார்
அந்தக் காலகட்டத்தில் பாலிவுட்டில் ராஜ்குமார் மிகச் சிறந்த நடிகராக மதிக்கப்பட்டாலும், அதே நேரத்தில் மிகவும் கணிக்க முடியாத குணம் கொண்டவராகவும், நேருக்கு நேர் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும் நபராகவும் அறியப்பட்டார். படப்பிடிப்பு தளங்களில் சக நடிகர்களுடனும், தயாரிப்பாளர்களுடனும், இயக்குநர்களுடனும் அவர் பலமுறை கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டதாகவும், அவரது நேரடியான பேச்சு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதாகவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. இதுவே அவருடன் இணைந்து நடிக்க சில நடிகர்கள் தயக்கம் காட்டிய காரணங்களில் ஒன்றாகக் அமைந்தது.
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினி
திரங்கா திரைப்படத்தில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான சிவாஜிராவ் வாக்லே கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ரஜினியை அனுகினா இயக்குநர் மெஹுல் குமார். கதையும் தன்னுடைய கதாபாத்திரம் பிடித்திருந்தபோதிலும் ராஜ்குமார் படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் ரஜினி இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார். ரஜினிகாந்த் அந்த வாய்ப்பை நிராகரித்த பிறகு, நடிகர் நசீருதீன் ஷாவையும் படக்குழு அணுகியது. அவரும் நடிக்க மறுத்த நிலையில், இறுதியாக நானா படேகர் தேர்வு செய்யப்பட்டார். சுவாரஸ்யமாக, நானா படேகரும் ராஜ்குமாரின் குணம் குறித்து கவலை தெரிவித்ததாக மெஹுல் குமார் கூறியுள்ளார். "ராஜ்குமார் படப்பிடிப்பில் தேவையில்லாமல் தலையிட்டால், நான் செட்டைவிட்டு வெளியேறிவிடுவேன்" என்று நானா படேகர் முன்கூட்டியே கூறியதாகவும் அவர் முந்தைய பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.
இறுதியில் ராஜ்குமார் மற்றும் நானா படேகர் இணைந்து நடித்த 'திரங்கா' 1993-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால், கதை பிடித்திருந்தபோதும் ராஜ்குமாருடன் இணைந்து நடிக்க விரும்பாத காரணத்தால் அந்த வாய்ப்பை ரஜினிகாந்த் தவறவிட்ட சம்பவம், அவரது திரைப்பயணத்தில் அதிகம் பேசப்படும் சுவாரஸ்ய நிகழ்வுகளில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.
