நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் . இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் ₹15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அந்த படம், உலகம் முழுவதும் ₹30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து விஷ்ணு விஷாலின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. முதல் 10 நாட்களில் உலகளவில் ₹44 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்திற்குப் பிறகும் இருவருக்கும் நல்ல நட்புறவு தொடரும் நிலையில், 'கட்டா குஸ்தி 2' படத்தை பார்த்து ரஜினிகாந்த் தெரிவித்துள்ள பாராட்டு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
விஷ்ணு விஷாலுக்கு ரஜினி பாராட்டு
விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், "செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை. ரொம்ப நல்லா நடித்திருக்கிறீர்கள். ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் அருமையாக நடித்திருக்கிறார். குட்டி சாராவை எப்படி கண்டுபிடித்தீர்கள்? அவர் பிரில்லியண்ட். விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களைக் கொடுங்கள்" என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாராட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், 'கட்டா குஸ்தி 2' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது Vishnu Vishal Studioz நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தை Ravi Teja Team Works நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
