1999 ஆம் வெளியான படையப்பா தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக புதிய சாதனையை படைத்தது. அன்று இப்படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு இன்றும் பலரது நினைவுகளில் இருந்து வருகிறது. படையப்பா படத்தின் ரிலீஸின் போது டிக்கெட்டிற்காக சென்னையில் உள்ள முதன்மையான திரையரங்குகளை ஸ்தம்பிக்க செய்துள்ளார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி பிறந்தநாளுக்கு ரிலீஸாகும் படையப்பா
இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் . இதனை கெளரவிக்கும் விதமாக அண்மையில் அவருக்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி தனது 75 ஆவது வயதை எட்டவிருக்கிறார். ரஜினி பிறந்தநாளை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் விதமாக அவர் நடித்த படையப்பா திரைப்பட ரீரிலீஸ் ஆக இருக்கிறது. 26 ஆண்டுகளுக்குப் பின் படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் பழைய ரசிகர்களுடம் பல புதிய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பல ரசிகர்கள் படையப்பா திரைப்படம் முதல் முறையாக வெளியானபோது இருந்த சூழலைப் பற்றியும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
படையப்பா வெளியானபோது
முத்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே.எஸ் ரவிகுமார் கூட்டணியில் வெளியான படம் படையப்பா. ரஜினி , ரம்யா கிருஷ்ணன் , செளதர்யா , ராதாரவி , நாசர் , சிவாஜி கணேசன் , செந்தில் , ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் காலத்தால் அழியாத இசையையும் பாடல்களையும் இந்த படத்திற்கு வழங்கியுள்ளார்.
முத்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படையப்பா படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்துள்ளது. 1999 ஆம் ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி முன்பதிவுகள் அறிவிக்கப்படிருக்கின்றன. ரஜினி படங்களை திரையிடுவதற்கு பெயர் போன திரையரங்கமாக உதயம் தியேட்டர் இருந்து வந்துள்ளது. இந்த திரையரங்கில் இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி உள்ள அம்பால் நகர் வரை டிக்கெட் வாங்க ரசிகர்கள் வரிசையில் நின்றுள்ளார்கள். 500 பேரை மட்டுமே அடக்கக் கூடிய திரையரங்கில் முதல் ஷோ முடிவதற்குள்ளாக 2000 ஆயிரம் ரசிகர்கள் திரையரங்கத்திற்குள் புகுந்துள்ளார்கள். அதே போல் ரஜினி படங்கள் மட்டும் ரிலீஸூக்கு ஒரு நாள் முன்பாக இரண்டு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
படையப்பா வசூல்
தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மத்தியில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியது படையப்பா. தமிழ் சார்பாக முதல் 50 கோடி வசூல் ஈட்டிய படம் படையப்பா. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 60 கோடி வரை உலகளவில் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.