தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அன்று முதல் இன்று வரை சிலாகித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த இடத்தை அவர் அடைய கடந்த வந்த பாதை மிகவும் கரடு முரடானது. பேருந்து நடத்துனராக இருந்து நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். 1975ம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநர் சிகரம் மீது இன்று வரை அந்த குரு பக்தி இருக்கிறது. அவருக்கு கே. பாலச்சந்தர் மீது எந்த அளவுக்கு மரியாதை, பக்தி உள்ளது என்பதை அவரின் பிளாஷ்பேக் வீடியோ மூலம் வெளிப்படுகிறது.
80ஸ் காலகட்டத்தில் உச்சபட்ச நடிகராக ஜொலித்து வந்த ரஜினிகாந்த் மிகவும் ஜாலியான இளைஞராக வாழ்க்கையை ஆட்டம் பாட்டம் என என்ஜாய் செய்து வந்தார். அதோடு சேர்ந்து குடி, சிகரெட் பழக்கமும் இருந்தது. ஒரு முறை கே. பாலச்சந்தர் படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடித்து வந்த போது நடைபெற்ற சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார் ரஜினிகாந்த். அதில் அவர் பேசுகையில் "ஒரு நாள் இரவு 8 மணி இருக்கும் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு, பேக் அப் சொல்லிட்டாங்க. அதனால போய்ட்டு குளிச்சுட்டு கொஞ்சம் மது அருந்திட்டு உட்கார்ந்தேன். அப்போ எனக்கு அழைப்பு வருது. சார் உங்களை உடனே கூப்பிடுறாரு. ஒரு ஷாட் மிஸ் ஆயிடுச்சு அது தெரியாம பேக் அப் பண்ணிட்டோம். நீங்க உடனே வரணும் சார் அப்படினு சொல்றாங்க. நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். தண்ணி போட்டு இருக்கேனே. என்ன பண்றதுனு தெரியாம திரும்பவும் போய் பிரஷ் பண்ணிட்டு, குளிச்சுட்டு ஸ்ப்ரே எல்லாம் அடிச்சுட்டு ஷாட் நடக்குற இடத்துக்கு மேக் அப் போட்டுட்டு போய் நிக்குறேன். பாலச்சந்தர் சார் கிட்ட போக கூடாதுனு ட்ரை பண்றேன் ஆனா அவருக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. அப்படியே ஆடிப்போய் உட்கார்ந்துட்டேன். ஆனா பாலச்சந்தர் சார் ஒண்ணுமே சொல்லல.
என்னை ரூமுக்கு வர சொன்னாரு. நாகேஷ் தெரியுமா உனக்கு அப்படினு கேட்டாரு. தெரியும்னு சொன்னேன். எவ்வளவு பெரிய நடிகன் தெரியுமா? அவன் முன்னாடி நீ ஒரு இரும்புக்கு கூட சமம் இல்ல. தண்ணி போட்டு அவன் வாழ்க்கையை அவனே கெடுத்துகிட்டான். இனிமே ஷூட்டிங்ல தண்ணி போட்டதை பார்த்தேன், கேட்டேன் 'செருப்பாலேயே அடிப்பேன்' அப்படினு சொன்னாரு.
தண்ணி அடிப்பதை அன்னிக்கு நான் விட்டது தான். காஷ்மீர், ஜம்மு அங்க எங்க என எங்க இருந்தாலும் எவ்வளவு குளிர் இருந்தாலும் மேக் அப்பில் இருக்கும் போது ஒரு சொட்டு தண்ணி கூட அடிக்கமாட்டேன்.